மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ள நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக மத்திய திறன் மேம்பாட்டு துறை இணையமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி வியாழக்கிழமை தன் பதவியை ராஜினாமா செய்தார்.
மத்திய அமைச்சரவையை ஓரிரு நாட்களில் மாற்றியமைக்க பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளார். பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை சீனா செல்லவுள்ள நிலையில், அதற்கு முன்னரே மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைக்கு, பாதுகாப்பு துறை, தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை, நகர்ப்புற வளர்ச்சி துறை, சுற்றுச்சூழல் துறை ஆகிய துறைகளுக்கு நிரந்தர அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை. மேலும், ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, தொடர் ரயில்வே விபத்துகளுக்கு பொறுப்பேற்று ராஜினாமா கடிதம் வழங்கினார். இருப்பினும், அவரை பொறுமையாக இருக்குமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், மத்திய அமைச்சரவையை மாற்றுவதுக்கு ஏதுவாக, சில அமைச்சர்கள் ராஜினாமா செய்வர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மத்திய திறன் மேம்பாட்டு துறை இணையமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி வியாழக்கிழமை தன் பதவியை ராஜினாமா செய்தார்.
முன்னதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் மஹேந்திரநாத் பாண்டே, உத்தரபிரதேச மாநில பாஜக தலைவராக, அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா அறிவித்தார். இதனால், பாண்டேவும் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல், அமைச்சர்கள் ஃபக்கன் சிங் குலஸ்தே, சஞ்சீவ் பல்யான், நிர்மலா சீதாராமன், உமா பாரதி, கல்ராஜ் மிஸ்ரா, கிரிராஜ் சிங் ஆகியோரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்வர் என தகவல் வெளியாகியுள்ளது.
பதவி விலகும் அமைச்சர்களுக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறும் என்று உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களவை தூனை சபாநாயகர் தம்பி துரைக்கு மத்திய அமைச்சரவையில் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.
ஹிமாச்சல் பிரதேசம், குஜராத், கர்நாடகா, ராஜஸ்தான், மஹராஷ்டிரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த புதிய முகங்கள் அமைச்சரவையில் இடம் பெறலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக கூட்டணியில் புதிதாக இணைந்த ஐக்கிய ஜனதா தளத்திற்கும் வாய்ப்பளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
முன்னதாக, வியாழக்கிழமை பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் சந்தித்து பேசினர். அவர்கள் இருவரும் என்ன பேசினர் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.
மேலும், அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, நரேந்திர சிங் தோமர், நிர்மலா சீதாராமன், ஜிதேந்திர சிங் மற்றும் பி.பி.சௌத்ரி ஆகியோருடன் கலந்தாலோசனை நடத்தினார். விரைவில் நடைபெறவிருக்கும் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் கட்சி செயல்பாடு குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.