”பசு பாதுகாப்பு பெயரில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை”: பிரதமர் மோடி

அனைத்துக் கட்சியினரிடையே பேசிய பிரதமர் மோடி, “பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்."

“பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”, என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இறைச்சிக்காக மாடு, எருது உள்ளிட்ட கால்நடைகளை விற்பனை செய்வதற்கு மத்திய பா.ஜ.க. அரசு அண்மையில் தடை விதித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கண்டன குரல் எழுப்பி வருகின்றனர். இந்த தடையையடுத்து, மாட்டிறைச்சி வைத்திருப்பவர்கள், ’பசு பாதுகாவலர்கள்’ என்ற கும்பலால் படுகொலை செய்யப்படுவதும், கடுமையாக தாக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், மாட்டிறைச்சி குறித்து பொதுவெளியில் பேசுவதற்கு கூட மக்கள் தயங்குகின்ற அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து நீண்ட மௌனத்தை கடைபிடித்து வந்த பிரதமர் மோடி, கடந்த சில நாட்களுக்கு முன்பு, “’பசு பாதுகாப்பு’என்ற பெயரில் மனிதர்களை கொல்வதை பொறுத்துக்கொள்ள முடியாது எனவும், அதனை காந்தி கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்”, என கூறியிருந்தார். இருப்பினும், ‘பசு பாதுகாப்பு’ என்ற பெயரில் மனிதர்கள் கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் திங்கள் கிழமை தொடங்க உள்ளதை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரிடையே பேசிய பிரதமர் மோடி, “பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு மதச்சாயம் பூச முயற்சிகள் நடைபெற்று வருகிறது”,என தெரிவித்தார்.

×Close
×Close