பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் தான் அமைச்சர் பதவி கேட்கவில்லை எனவும், பிரதமரும் தனக்கு வழங்கவில்லை எனவும், ராஜ்ய சபா எம்.பி. சுப்பிரமணிய சாமி தெரிவித்தார்.
சர்ச்சையான கருத்துகளை பொதுவெளியில் கூறுவதற்கு சற்றும் தயங்காத சுப்பிரமணிய சாமி குறித்து ’Evolving with Subramanian Swamy, A Roller Coaster Ride’ என்ற பெயரில் அவருடைய மனைவி ரோக்ஸ்னா சாமி புத்தகம் எழுதியுள்ளார். இப்புத்தகத்தின் வெளியீட்டு விழா டெல்லியில் ஞாயிற்று கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய சுப்பிரமணிய சாமி, தன் சுயசரிதையை விரைவில் எழுதுவேன் எனவும், அந்த புத்தகம் வெளிவந்தவுடன் பலர் அவர்களது புகழை இழந்துவிடுவர் எனவும் எச்சரித்தார். மேலும், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் தான் அமைச்சர் பதவி கேட்கவில்லை எனவும், பிரதமரும் தனக்கு வழங்கவில்லை எனவும் சுப்பிரமணிய சாமி கூறினார்.
“தகுந்த காலம் வரும்போது நான் அமைச்சராவேன். எனக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அது எனக்கு நிச்சயம் கிடைக்கும்”, என சுப்பிரமணிய சாமி தெரிவித்தார்.
மேலும், தனக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை தன்னால் இயன்றவரை சரியாக செய்வதே தன் வாழ்க்கையின் நோக்கம் என சுப்பிரமணிய சாமி கூறினார்.
மேலும், கடந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக சுப்பிரமணிய சாமி அறிவிக்கப்படுவார் என யூகங்கள் வெளியானது குறித்து விளக்கம் அளித்த அவர், டெல்லியில் 80 சதவீத பாஜகவினர் தன்னை வேட்பாளராக நிறுத்த விரும்புவதாக, அப்போதைய டெல்லி பாஜக தலைவர் தன்னிடம் கூறியதாகவும், ஆனால், தனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் அவர் கூறினார். மேலும், இதுகுறித்து தான் எந்த புகாரும் கூறியதில்லை என சுப்பிரமணிய சாமி தெரிவித்தார்.
மேலும், முன்னாள் ஆர்.பி.ஐ. கவர்னர் ரகுராம் ராஜனுடன் தனக்கு கொள்கை வேறுபாடுகள் மட்டுமே இருப்பதாக தெரிவித்த அவர், வேறு எந்தவித தனிப்பட்ட பிரச்சனைகளும் இல்லை என கூறினார்.
ரோக்ஸ்னா சாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில், ஊடகவியலாளர்கள் ராஜ்தீப் சர்தேசாய், தவ்லீன் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.