காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடந்த இரு வாரங்களாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது, மறைமுகமாக பிரதமர் மோடி அரசை சாடிய ராகுல், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கொண்ட இந்தியாவின் நற்பெயருக்கு பிரிவினைவாத சக்திகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. பிரிவினைவாத அரசியல் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. அது நாட்டுக்கு ஆபத்து. அதற்கு எதிராக வெளிநாடு வாழ் இந்தியர்கள் எழ வேண்டும் என வலியுறுத்தினார்.
வேலைவாய்ப்பு, விவசாயம், கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டது நம் நாடு என குறிப்பிட்ட ராகுல், இந்தியாவிற்கு வந்து நாட்டுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் உழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், இந்தியாவில் மட்டும் ஒரு நாளைக்கு 30 ஆயிரம் பேர் வேலைவாய்ப்புச் சந்தையில் புதிதாக இணைகின்றனர். ஆனால், இந்திய அரசு ஒரு நாளைக்கு 500 பேருக்குத் தான் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது என்றார்.
இந்த நிலையில், நதாலியா ராமோஸ் எனும் இளம்பெண் தனது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் ராகுல் காந்தியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். மேலும், "சொல்திறமிக்க மற்றும் புத்திசாதுர்யமான ராகுல் காந்தியுடன் கடந்த இரவு" என்றும் நதாலியா தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
நதாலியாவின் அந்த புகைப்படத்தை பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டரில் பதிவிட்டு, "யார் இந்த நதாஷா ராமோஸ்? நான் 'புத்து' வுடன் கடந்த இரவு இருந்தேன்" என அவள் ட்வீட் செய்துள்ளார். இதுதான் ராகுலின் விரிவுரை பயணம் என்று சு.சுவாமி குறிப்பிட்டுள்ளார்.
நதாலியா ராமோஸ் ஸ்பானிஷ் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.