மும்பை புறநகர் பகுதியில் உள்ள பால் கேசவ் தாக்கரேவின் வீட்டுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்றார்.
அங்கு மராட்டிய முன்னாள் முதல் அமைச்சர் உத்தவ் தாக்கரேவை சந்தித்துப் பேசினார்.
அப்போது உத்தவ் தாக்கரே மனைவி ராஷ்மி, மகன்கள் ஆதித்யா எம்.எல்.ஏ, தேஜஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்த புகைப்படத்தை ஆதித்யா ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.
அதில், “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் மாதோஸ்ரீ இல்லம் வந்ததை எண்ணி மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
ரஜினிகாந்த் ஏற்கனவே மாதோஸ்ரீ இல்லத்துக்கு 2010ஆம் ஆண்டு சென்றிருந்தார். அப்போது சிவசேனா நிறுவனத் தலைவர் பால் கேசவ் தாக்கரேவை சந்தித்துப் பேசினார். இந்த நிலையில் மீண்டும் ரஜினிகாந்த் பால் தாக்கரே இல்லத்துக்கு சென்றுள்ளார்.
ரஜினிகாந்த், ஜூலை 2021 இல், தனது அரசியல் பிரவேசத்திற்காக தொடங்கப்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தை கலைப்பதாக அறிவித்தார்.
அப்போது, எதிர்காலத்தில் தன்னை அரசியலில் ஈடுபடுத்தும் எண்ணம் இல்லை என்று மீண்டும் உறுதிப்படுத்தினார். இதனால் ரஜினிகாந்த், உத்தவ் தாக்கரே சந்திப்பில் அரசியல் பேசப்பட்டதா என்ற கேள்வியெழுந்துள்ளது.
ஆனால் இந்தச் சந்திப்பின் போது எந்த அரசியலும் பேசப்படவில்லை. மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு என்ற தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த், பால் தாக்கரே மீது மதிப்பு கொண்டவராவார்.
சிவசேனா கட்சி தற்போது இரு பிரிவாக உள்ளது. இதற்கிடையில், ஷிண்டே அணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இது தொடர்பான வழக்குகளின் விசாரணை டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/