இந்திய உச்சநீதிமன்ற 4 நீதிபதிகள் பரபரப்பு புகார்களை தெரிவித்தனர். பணியில் இருக்கும் நீதிபதிகள் இதுபோல செய்தியாளர்களை சந்தித்தது வரலாற்றில் இது முதல் முறை!
இந்திய நீதித்துறையில் பணியில் இருக்கும் நீதிபதிகள் துறை ரீதியிலான அல்லது அரசு தொடர்பான விவரங்களை பொது வெளிகளில் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதில்லை. இந்திய நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஜஸ்டி செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் இன்று நீதிபதி செல்லமேஸ்வரின் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அது தொடர்பான LIVE UPDATES
மாலை 3.00 : உச்சநீதிமன்ற செயல்பாடு குறித்து 4 நீதிபதிகள் அளித்த பேட்டி கவலைப்பட வைக்கிறது என காங்கிரஸ் கட்சி சார்பில் ட்விட்டரில் கருத்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பிற்பகல் 1.45 : ‘ரொம்பவும் கவலையும் வலியும் அடைகிறேன். நாட்டின் உயர்ந்த நீதிமன்றம் கடுமையான அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பதாலேயே, பிரஸ் மீட் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது’ என்றார், மூத்த வழக்கறிஞர் சல்மான் குர்ஷித்.
பிற்பகல் 1.40 : ‘நீதித்துறைக்கு இன்று கருப்பு நாள். இந்த பத்திரிகையாளர் சந்திப்பு தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இனி ஒவ்வொரு பொது மனிதரும் எல்லா நீதிமன்ற ஆணைகளையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பார். ஒவ்வொரு தீர்ப்பும் கேள்விக்கு உள்ளாக்கப்படும்’ என்றார் மூத்த வழக்கறிஞர் உஜ்வால் நிகாம்.
பிற்பகல் 1.30 : ‘இது கவலைக்குரிய அம்சம். தலைமை நீதிபதி மீது சந்தேக நிழல் படிந்துவிட்டது. தலைமை நீதிபதி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதால், யாராவது அது தொடர்பான சூழலை கையாள வேண்டியிருந்தது. அதுதான் முன் உதாரணம் இல்லாத இந்த முயற்சி’ என்றார், பிரபல வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன்.
பிற்பகல் 1.25 : ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எஸ்.சோதி இது குறித்து கூறுகையில், ‘இந்த 4 நீதிபதிகளையும் ‘இம்பீச்மெண்ட்’ செய்ய வேண்டும் என நான் கருதுகிறேன். இதற்கு மேல் அங்கே அமர்ந்து உத்தரவுகளை இவர்கள் பிறப்பிக்க முடியாது. இந்த ‘தொழிற்சங்கயிஸம்’ தவறானது. ஜனநாயகம் ஆபத்தாக இருக்கிறது என இவர்கள் சொல்ல முடியாது. நாடாளுமன்றம், நீதிமன்றம், போலீஸ் நடைமுறைகள் நம்மிடம் இருக்கின்றன’ என்றார்.
பிற்பகல் 1.15 : பின்னர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு இவர்கள் எழுதிய கடிதத்தை மீடியாவிடம் வெளியிட்டனர். அதில், உச்சநீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த சில உத்தரவுகள் மொத்த நீதி நிர்வாக நடவடிக்கைகளுக்கு எதிராக அமைந்தது குறித்து கவலை தெரிவித்திருக்கிறார்கள்.
4 நீதிபதிகளும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதம் முழு விவரம் ஆங்கில பதிப்பு...
மதியம் 12.35 : ‘எங்களில் யாரும் பதவியின் கண்ணியத்தை மீறவில்லை. நாட்டுக்கு நாங்கள் செய்யவேண்டிய கடமையை செய்கிறோம்’ என குறிப்பிட்டார் நீதிபதி கோகாய்.
மதியம் 12.33 : ‘நாட்டில் நிறைய புத்திசாலி மனிதர்கள், நிறைய புத்திசாலித்தனமான விஷயங்களை பேசுகிறார்கள். இன்றிலிருந்து 20 வருடங்கள் கழித்து நீதிபதிகள் செல்லமேஸ்வர், கோகாய், லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் தங்கள் மனசாட்சியை விற்றுவிட்டதாகவோ, அரசமைப்பு சட்டத்திற்கு உகந்ததை செய்யவில்லை என்றோ பேசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை’ என்றார் செல்லமேஸ்வர்.
மதியம் 12.30 : ‘எங்களில் நால்வர் சமரசம் ஆனால், நாட்டின் ஜனநாயகம் செயல்படாமல் போய்விடும். இன்று காலையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை நாங்கள் சந்தித்தோம். குறிப்பிட்ட ஒரு கோரிக்கையை நாங்கள் வைத்தோம். ஆனால் அவரை எங்களால் சமாதானப்படுத்த முடியவில்லை. எனவே நீதித்துறையை பாதுகாக்க இந்த நாட்டிடம் இதை குறிப்பிடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. நாட்டு மக்கள் முன்னிலையில் எங்கள் கருத்தை முன் வைக்கிறோம்.’ என பிரஸ் மீட் நோக்கத்தை பூடகமாக குறிப்பிட்டார் நீதிபதி கோகாய்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள், டெல்லியில் நீதிபதி செல்லமேஸ்வர் இல்லத்தில்!
மதியம் 12.25 : நீதிபதி செல்லமேஸ்வர் மேலும் கூறுகையில், ‘4 மாதங்களுக்கு முன்பு எங்களில் நால்வர் கையெழுத்திட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு ஒரு கடிதம் எழுதினோம். ஒரு குறிப்பிட்ட விஷயத்தை குறிப்பிட்ட விதமாக செய்யப்பட வேண்டும் என நாங்கள் விரும்பினோம். அது செய்யப்பட்டது. ஆனால் அந்த முறையில், நீதித்துறையின் இறையாண்மை குறித்த கேள்விகள் எழுந்தன. அதே விஷயம், இன்றும் நடந்தது.’ என்றார். நீதிபதி கோகாய் குறிப்பிடுகையில், ‘இவற்றை சொல்வதால், இந்த நாட்டுக்கு எங்கள் பணியை நாங்கள் செய்கிறோம்’ என குறிப்பிட்டார்.
மதியம் 12.15 : ‘நிர்வாகத்தை சரி செய்ய எங்களது எல்லா முயற்சிகளும் தோற்றுவிட்டன. நீதித்துறையை காப்பாற்றாவிட்டால், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியாது’ என செல்லமேஸ்வர் குறிப்பிட்டார்.
இந்திய உச்சநீதிமன்ற 4 நீதிபதிகள் செய்தியாளர் சந்திப்பு
மதியம் 12.10 : இந்த சந்திப்பை, ‘நீதித்துறை வரலாற்றில் அசாதாரணமானது’ என நீதிபதி செல்லமேஸ்வர் தனது பேட்டியின் தொடக்கத்தில் குறிப்பிட்டார். ‘கடந்த சில மாதங்களாக உச்சநீதிமன்ற நிர்வாகம் முறையாக இல்லாத காரணத்தால் இந்த சந்திப்பை நடத்த நேர்ந்தது’ என குறிப்பிட்டார் அவர்.