நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாற்றம் செய்து டாஸ்மாக் கடைகளை திறக்கும் தமிழக அரசின் முடிவிற்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் இருக்கும் மதுபான கடைகளை அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகைளில் 500 மீட்டருக்குள் இருந்த மதுபானக் கடைகள் மூடப்பட்டன. தமிழகத்தில் 1000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
இதன்காரணமாக, மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட நெடுஞ்சாலைகளின் கீழ் கொண்டுவர தமிழகம் உட்பட பல்வேறு மாநில அரசுகள் முயற்சிகள் மேற்கொண்டன. இதற்கு எதிராக பல்வேறு வழக்குகளும் தொடரப்பபட்டன.
இதில் தமிழக அரசு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில், நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாற்றி டாஸ்மாக் கடைகளை திறக்கும் தமிழக அரசின் விளக்கத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இது தொடர்பான எழுத்துப்பூர்வமான விளக்கம் நிறைந்த தீர்ப்பு ஓரிரு நாளில் வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.