நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதற்கு பிறகு தமிழகம் முழுவதும் மாணவர்கள், மாணவ அமைப்புகள் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களுக்கு எதிராக தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஜி.எஸ்.மணி எனும் வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று (வெள்ளி) விசாரித்த உச்சநீதிமன்றம், நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த தடை விதித்து உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இன்று மாலை ஐந்து மணிக்கு திருச்சியில் திமுக தலைமையில், நீட் தேர்வு முறையை திரும்பப் பெறக் கோரியும், மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன பொதுக் கூட்டம் நடைபெற இருந்தது.
ஆனால், உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து, அனைத்துக் கட்சி பொதுக் கூட்டத்திற்கு தடை விதித்து, அதற்கான நோட்டீசை திருச்சி மாநகர ஆணையர் அருண் எதிர்க்கட்சிகளிடம் அளித்தார்.
இருப்பினும், பொதுக்கூட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று ஸ்டாலின் தெரிவித்தார். அதேபோல், தற்போது திருச்சியில் மழை பெய்து வரும் நிலையிலும், கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்ட பல தலைவர்கள் இந்த பொதுக் கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து பேசி வருகின்றனர்.
இந்த நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் எழுத்துப் பூர்வமான அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில், "நீட் தேர்விற்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் நடத்த தடை விதிக்கவில்லை. அமைதியான முறையில் போராட்டம் நடத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. எனவே, இந்த நீட் தேர்வு விவகாரத்தில் சட்டம் ஒழுங்கை பாதிக்காத வகையில், அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம். போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமைகளில் ஒன்று என்பதை நீதிமன்றம் உணர்ந்தே இருக்கிறது. அதேசமயம், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் வகையில் போராட்டம் நடந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கும், அமைதியான போராட்டத்திற்கும் வேறுபாடு உள்ளது" என்று அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தற்போது தெளிவாகியிருக்கும் நிலையில், தமிழகத்தில் நீட் தேர்விற்கு எதிராக போராட்டம் நடத்தலாம் என்ற புரிதல் நமக்கு கிடைக்கிறது. அதேசமயம், 'சட்டம்-ஒழுங்கு பாதிக்காத வகையில் போராட்டம் நடத்த வேண்டும். மீறினால் மாநில அரசு நடவடிக்கை எடுக்கலாம்' என்பதே உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பின் சாராம்சமாக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.