டெல்லி மற்றும் புறநகரில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. உத்தரவுக்கு முன்பு வாங்கிய பட்டாசுகளை வெடித்துக் கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பட்டாசுகளை மொத்தமாகவோ, சில்லரையாகவோ விற்க விதிக்கப்பட்டிருந்த தடையை தற்காலிகமாக நீக்கி கடந்த மாதம் 12-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்தும், டெல்லியில் பட்டாசு விற்க தடை விதித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு, டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை, வருகிற அக்., 31-ஆம் தேதி வரை தொடரும் என்று கடந்த 9-ஆம் தேதி தீர்ப்பளித்தது. பட்டாசு விற்பனையை அனுமதிக்கும் வகையில் கடந்த மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பு, நவம்பர் 1-ஆம் தேதி முதல் தான் அமலுக்கு வரும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.
இந்த தீர்ப்பில் திருத்தம் செய்யக்கோரி டெல்லி பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் ஏற்கனவே விரிவாக விவாதிக்கப்பட்டு இருப்பதாகவும், முந்தைய உத்தரவில் ஏதேனும் மாற்றம் செய்தால் அது அந்த உத்தரவின் அடிப்படை நோக்கத்துக்கு எதிரானதாக அமையும் என்றும், எனவே பட்டாசு விற்பனை தொடர்பாக எங்கள் உத்தரவில் எந்த திருத்தமும் செய்ய முடியாது என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார்கள்.
அதேசமயம் மக்கள் தீபாவளி கொண்டாட வேண்டும் என்று விரும்பினால், உச்சநீதிமன்றம் கடந்த 9-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு முன்பு வாங்கிய பட்டாசுகளை வெடித்துக் கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளனர்.
இதற்கு சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஆதரவு கிடைத்துள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "மகிழ்ச்சிக்காக பட்டாசு வெடிப்பதால் மட்டும் தீபாவளி நடப்பதில்லை. டெல்லியை ஒப்பிடுகையில் எத்தனையோ மற்ற மாநிலங்களில் ஏழை குடிசைகளில் வசிக்கும் மக்கள் பட்டாசு இல்லாமல் தீபாவளி கொண்டாடவில்லையா?. ஆனால், டெல்லியில் கண்டிப்பாக பட்டாசுகளை வெடிக்க தடை செய்யப்பட வேண்டும். புகை மாசினால் உயிர் இழப்புகள் மற்றும் நோய்நொடிகள் அதிக அளவில் பெருகி விட்டது. இந்த நிலை அனைத்து நகரங்களுக்கும் வரவிடாமல் தடுக்க மக்களாகிய நமக்கும் பொறுப்பு உண்டு" என்றனர்.