சமூக நலத்திட்டங்களை பெற ஆதார் எண்ணை கட்டாயமாக்குவது தொடர்பான அனைத்து வழக்குகளையும் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆதார் எண்ணைக் கொண்டு வரும்போது, குற்றங்களை தடுப்பதற்காகவே ஆதார் கொண்டு வரப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், சமூக நலத்திட்டங்கள், அரசு மானியங்கள் பெறுவதற்கு என படிப்படியாக மத்திய அரசு ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கியது. நிரந்தர கணக்கு எண்ணை பெறுவதற்கு ஆதார் எண் வேண்டும் எனவும், வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனவும் மத்திய அரசு தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
இதனால், ஒருவரது தனிப்பட்ட விவரங்கள் பாதுகாக்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே, ஆதார் தொடர்பான வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், மக்களுக்கு பல்வேறு தேவைகளைப் பெற ஆதார் கட்டாயம் என மத்திய அரசு கட்டாயப்படுத்தக் கூடாது என பலமுறை கூறியது. ஆனால், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தின் கருத்தை மதிக்கவில்லை எனவும் குற்றாச்சாட்டு எழுந்தது.
இதனிடையே, மத்திய அரசின் சமூக நலத்திட்டங்களை பெற ஆதார் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பால், பெரும்பாலான மக்களால் சமூக நலத்திட்டங்களை பெறுவது சிரமமானதாக இருக்கும் என அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மூன்று மனுக்கள் தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டன.
ஆனால், இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இந்நிலையில், புதன் கிழமை இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்குவது தொடர்பான வழக்குகளை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என உத்தரவிட்டார். வரும் 18, 19 ஆகிய தேதிகளில் இந்த வழக்குகளை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.