தனிமனித சுதந்திரத்தை, மீறும் வகையில் ஆதார் உள்ளதா என்பது குறித்த வழக்கில், தனிமனித ரகசிம் என்பது அடிப்படை உரிமையே என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்குவதற்கு பொதுமக்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. இதையடுதத்து, பல்வேறு மாநிலங்களில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்றம், அரசு திட்டங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கக் கூடாது என்று உத்தரவிட்டது.
ஆனாலும், பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் எண் அவசியம் என்பது போலவே மத்திய அரசு செயல்பட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில், நாட்டில் ஆதார் வைத்திருப்போர்களில் சுமார் 13.5 கோடி பேரின் தகவல்கள் இணையதளத்தில் கசிந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் சமீபத்தில் தெரியவந்துள்ளது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது. அதில், மத்திய, மாநில அரசுகளின் மூலம் தான் இந்த தகவல்கள் கசிந்துள்ளது என்றும், இதற்கு தகுந்த பாதுகாப்பு இல்லை என்பதும் தான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள தனி மனித சுதந்திரத்தை மீறும் வகையில் ஆதார் உள்ளதா என்பது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் தலைமையிலான சலமேஷ்வர், எஸ்.ஏ.பாப்டே, ஆர்கே.அகர்வால், ரோகிந்தன் நாரிமன், ஏ.எம்.சப்ரே, சந்திராசூட், சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் அப்துல் நசீர் ஆகிய 9 நீதிபதிகள் கொண்ட உயர் அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கில் தீவிர விசாரணையை மேற்கொண்டது.
இந்த வழக்கில் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களான பஞ்சாப், கர்நாடகா, புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் பாஜ ஆளும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் சார்பாகவும், தனிமனித உரிமையும் அடிப்படை சட்ட உரிமையும் ஒன்றுதான் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆதார் வழக்கில் விசாரணை முடிந்துவிட்டது என்றும், விரைவில் இது தொடர்பான தீர்ப்பு வெளியிடப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில், தனிமனித ரகசியம் என்பது அடிப்படை உரிமையே என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.