நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிசெய்தது.

தலைநகர் தில்லியில்  கடந்த 2012-ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயா வழக்கில், குற்றவாளிகள் நான்கு பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்தது.

தில்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி இரவு மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது பேருந்தில் பயணம் செய்த 6-பேர் அந்த மாணவியையும், அவரது நண்பரையும் கடுமையாக தாக்கினர். அதோடு மட்டுமல்லாமல், அந்த மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து பேருந்தில் இருந்து வெளியே வீசினர். அந்த மாணவியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு நிர்பயா என  அழைக்கப்படுகிறார்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிர்பயா(மாற்றப்பட்ட பெயர்)  தில்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், நிர்பயாவிற்கு மேல் சிகிச்சை அளிக்க வேண்டியிருந்ததால், அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  13 நாட்கள் ஆன நிலையில் நிர்பயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா,அக்‌ஷய் தாகுர், ராம் சிங் மற்றும் ஒரு சிறுவன் என 6 பேரை கைது செய்து செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2013-ம் ஆண்டு 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தில்லி பெருநகர நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் மற்றொருவர்,  சிறுவன்(18 வயதுக்கும் குறைவானவர்) என்பதால் அவரை 3 ஆண்டுகள் கூர்நோக்குப் பள்ளியில் சேர்க்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, குற்றவாளிகள் தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே குற்றவாளிகளில் ஒருவரான ராம் சிங் கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. தில்லி உயர் நீதிமன்றம் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததோடு, அவர்களுக்கு பெருநகர நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையையும் உறுதிசெய்வதாக தீர்ப்பளித்தது.
இதைத்தொடர்ந்து குற்றவாளிகள் தரப்பில் இருந்து உச்ச நீதிமன்றத்தில், மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி, அசாக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வானது  விசாரணை செய்தது.
குற்றவாளிகள் தரப்பில் ஆர்.பி சிங், எம்.எல் சர்மா ஆகிய வழக்கறிஞசர்கள் வாதாடும்போது, குற்றம்சாட்டப்பட்டுள்ள 4-பேரும் ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என்பதோடு, அவர்கள் இளம் வயதினர். ஆகவே அவர்கள் மீது உச்ச நீதிமன்றம் கருணை காட்ட வேண்டும் என்று தெரிவித்தனர்.
இது தொடர்பாக நீதிபதிகள் தெரிவிக்கும் போது, இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு கருணை காட்டுவதற்கு எந்த விதமான முகாந்திரமும் இல்லை. எனவே, தில்லி பெருநகர நீதிமன்றம் உறுதி செய்த தூக்கு தண்டனையை இந்த உச்ச நீதிமன்ற அமர்வு உறுதி செய்கிறது. மேலும், துணிச்சலாக செய்யப்பட்டுள்ள இந்த குற்றம் நாட்டில் அதிர்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
கொடூரமான கொலை என்பதால், அரிதினும் அரிதான இந்த வழக்கில் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்த அமர்வு, பெண்களை மதிக்க சிறுவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தது. நிர்பயா கொலை வழக்கானது சுனாமி ஆழிப்பேரலையைவிட மிக மோசமானது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இது தொடர்பாக நிர்பயாவின் தாயார் தீர்ப்புக்கு முன்னர் கூறும்போது, நிர்பயா வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்யும் என நம்புவதாக தெரிவித்தார். இது குறித்து அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் போது: நாங்கள் இந்திய நீதிமன்றத்தின் மீதும் சட்டத்தின் மீதும் முழு நம்பிக்கை வைத்திருக்கிறோம். எனவே, குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்யும். உச்ச நீதிமன்றம் எனது மகளுக்கு நீதி வழங்கும். இந்த தீர்ப்பு உலகத்திற்கே ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என்று கூறினார்.

 

×Close
×Close