பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பங்குடியினருக்கு (எஸ்சி, எஸ்டி) எதிரான வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2018, அரசியலமைப்பின்படி செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்துள்ளது. மேலும், எஸ்சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டப்படி, எஸ்சி, எஸ்.டி-யினருக்கு எதிரான வன்கொடுமையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்படும் நபர் முன் ஜாமீன் பெற முடியாது என்பதையும் உறுதி செய்துள்ளது.
மார்ச், 2018-இல் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தன்மையை நீர்த்துப்போகும்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, மத்திய அரசு கடந்த ஆண்டு எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்தது. இந்த திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விவகாரத்தில், கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, வினீத் சரண், ரவிந்திர பாட் ஆகிய மூன்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்த எஸ்சி, எஸ்.டி திருத்தச் சட்டப்படி, முதல்நிலை விசாரணை அவசியம் இல்லை, மேலும், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை வழக்குகளில் குற்றம்சாட்டப்படுபவர் அரசு ஊழியர்கள் எனில், உயர் அதிகாரிகள் அம்ற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகளின் ஒப்புதல் இன்றி எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யலாம்.
இதற்கு முன்பு, மார்ச் 20, 2018-இல் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கோயல், யுயு லலித் அமர்வு அளித்த தீர்ப்பில், எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ், அரசு ஊழியர்களை அவர்களுடைய மேல் அதிகாரிகளின் முன் அனுமதியின்றி கைது செய்ய முடியாது என்று உத்தரவிட்டது. மேலும், கைது செய்ய மூத்த காவல்துறை கண்காணிப்பாளரிடம் இருந்து அனுமதி பெற வேண்டும் என்றும் அரசு ஊழியர்கள் அல்லாதவர்கள் எனில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்வதற்கு முன்பு முதற்கட்ட விசாரணை நடந்த்த வேண்டும் என உத்தரவிட்டது.
இதனால், எஸ்சி, எஸ்டி மக்கள் நாடு முழுவதும் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு, எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
இந்த எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து வழக்கறிஞர்கள் பிரித்விராஜ் சவுகான் மற்று பிரியா சர்மா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2018, சட்டப்பிரிவு 14, 19, 21 ஆகியவை இந்திய அரசியல் சட்டத்தை மீறுவதாக இருக்கிறது என்று தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை கடந்த ஓராண்டுக் காலமாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, வினீத் சரண், ரவிந்திர பாட் அமர்வு திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கியது. அதில், மத்திய அரசு கொண்டு வந்த 2018 வன்கொடுமை திருத்தச் சட்டம் அரசியலமைப்பின்படி செல்லும் என்று தீர்ப்பு அளித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, மத்திய அரசால் செய்யப்பட்ட திருத்தம், எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கிழ் குற்றம் சாட்டப்படுபவர்களை உடனடியாக கைது செய்வதையும் அவர்களுக்கு முன் ஜாமீன் இல்லை என்பதையும் உறுதி செய்யும் என்று கூறினார்கள். மேலும், நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர்.ஷா, பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்தச் சட்டம் சிலரை மிரட்டுவதற்காக பயன்படுத்துவதற்கு சாத்தியக் கூறுகள் உள்ளன. பல்வேறு சிக்கல்கள் எழக்கூடும். இதில், குறிப்பிட்ட நேரத்திற்குள் விசாரணையை முடிக்க முடியாது அல்லது விசாரணையை எதிர்பார்த்தபடி முடிக்க முடியாது. இந்த தாமதம் தாழ்த்தப்பட்டவர்கள் மீதான அவலத்தை மேலும் அதிகரிக்கும் என்று கூறினர்.