விபத்துகளால் என் மனம் வலிக்கிறது: ராஜினாமா கடிதம் கொடுத்த ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு!

மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, பிரதமர் மோடியிடம் இன்று தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.

கடந்த நான்கு நாட்களில் நடந்த வெவ்வேறு ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று, பிரதமர் மோடியிடம் இன்று தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார் மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு.

இதுகுறித்து தனது ட்விட்டரில் அமைச்சர் சுரேஷ் பிரபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு அமைச்சராக மூன்று வருடங்களுக்கும் குறைவாக பணியாற்றி, இந்திய ரயில்வேயின் மேம்பாட்டிற்காக எனது ரத்தத்தையும், வியர்வையையும் அர்ப்பணித்துள்ளேன். பிரதமர் மோடியின் தலைமையில் ரயில்வேயின் அனைத்து நிலைகளிலும் பல ஆண்டுகளாக காணப்பட்ட அலட்சியத்தை நிவர்த்தி செய்ய முயற்சி செய்து உள்ளேன். இப்போது பிரதமர் மோடியின் புதிய இந்தியா திட்டத்தின் கீழ், இந்திய ரயில்வே தரமானதாகவும், நவீனமாகவும் மாற்றப்பட்டுள்ளது.

இந்த வழியில் இந்திய ரயில்வே தற்போது முன்னேறிக் கொண்டிருக்கிறது என்பதை சத்தியம் செய்து கூறுவேன். ஆனால், எதிர்பாராதவிதமாக நடந்த ரயில் விபத்துகள் காரணமாக, பயணிகள் உயிரிழந்திருப்பதையும், காயம் அடைந்திருப்பதையும் பார்க்கும் போது, நான் உச்சக்கட்ட வேதனைக்கு ஆளாக்கப்பட்டேன். எனது மனம் வலிக்கிறது. எனவே, இதற்கு முழு பொறுப்பேற்று, நான் எனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடியிடம் அளித்துள்ளேன். மரியாதைக்குரிய பிரதமர் அவர்கள், என்னை பொறுத்திருக்கும்படி கூறியுள்ளார்” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த 19-ஆம் தேதி ஒடிசா மாநிலம் பூரி நகரில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாருக்கு சென்ற உத்கால் எக்ஸ்பிரஸ், முசாபர்நகர் அருகே கடவுளி என்ற இடத்தில் தடம் புரண்டு கவிழ்ந்தது. இந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். 156 பேர் படுகாயம் அடைந்தனர். இன்றும், டெல்லியை நோக்கி சென்ற கைபியாத் எக்ஸ்பிரஸ் ரெயில் உத்தரபிரதேசத்தில் தடம் புரண்டது. 5 நாட்களில் நடைபெறும் இரண்டாவது ரயில் விபத்து இதுவாகும், இந்நிலையில் ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.

இதேபோன்று, இந்த விபத்துக்களுக்கு பொறுப்பேற்று ரயில் வாரிய தலைவர் ஏ.கே.மிட்டல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் தனது ராஜினாமா கடிதத்தை ரயில்வே அமைச்சகத்திடம் கொடுத்துள்ளார். ஆனால், அமைச்சர் சுரேஷ் பிரபு இதனை ஏற்றுக் கொண்டாரா என்பது குறித்து இதுவரை இறுதியான தகவல் வெளியாகவில்லை.

×Close
×Close