Advertisment

பெரும்பான்மையை நிரூபித்தார் நிதிஷ்குமார்: நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!

சட்டசபையில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில், பெரும்பான்மைக்கு, 123 தொகுதிகள் தேவை. இதில், ஐக்கிய ஜனதா தளத்துக்கு 71, பா.ஜ.க.வுக்கு, 53 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
பெரும்பான்மையை நிரூபித்தார் நிதிஷ்குமார்: நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!

ரயில்வே துறை அமைச்சராக, ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு இருந்தபோது கடந்த 2006-ஆம் ஆண்டில் உணவகங்களுக்கு டெண்டர் விடுவதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து, அவரது வீட்டில் சோதனை நடத்தியது.

Advertisment

அதேபோல், லாலுவின் மகனும், பீகார் துணை முதல்வராக இருந்த தேஜஸ்வியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது. பினாமி சொத்துகள் இருப்பதாகக் கூறி ஆவணங்களையும் கைப்பற்றின. அதேபோல் லாலுவின் மகள் மிசா பாரதி மற்றும் அவரது கணவரது வீடு அலுவலகங்களிலும் சிபிஐ சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையையடுத்து, பீகார் மாநில அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

மேலும், தம் வீட்டில் நடைபெற்ற சோதனைக்கு மத்திய அரசின் மீது குற்றம் சாட்டிய லாலுவின் குரலுக்கு காங்கிரஸ் ஆதரவுக் குரல் கொடுத்தது. அதேபோல், லாலுவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டால் நிதிஷ்குமாருக்கு ஆதரவளிப்போம் என பீகார் பாஜக-வினர் கூறி வந்தனர்.

இதனைத்தொடர்ந்து, பீகார் மாநிலத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், மெகா கூட்டணி அமைத்து பாஜக-வை வீழ்த்திய ஐக்கிய ஜனதாதளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே பூசல் உருவானது.

இத்தகைய சூழலில், நேற்று நடைபெற்ற ஐக்கிய ஜனதாதள கட்சியின் எம்எல்ஏ-க்கள் கூட்டத்துக்கு பின்னர், ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட தேஜஸ்வி யாதவை துணை முதல்வராக வைத்துக்கொண்டு முதல்வர் பதவியில் தொடர தான் விரும்பவில்லை என நிதிஷ்குமார் வெளிப்படையாக கூறினார். மேலும், பிகார் ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தையும் அவர் வழங்கினார். இதையடுத்து, பாஜக-வுடன் நிதிஷ், கூட்டணி அமைப்பது உறுதியானது. மேலும், நிதிஷ்குமாருக்கு ஆதரவளிப்போம் என பாஜக-வினர் வெளிப்படையாகவே அறிவித்தனர்.

பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள், தவிர மூன்று சுயட்சைகளின் ஆதரவுடன் 132 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக கூறி, அம்மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை சந்தித்து, ஆட்சியமைக்க நள்ளிரவில் நிதிஷ் உரிமை கோரினார்.

ஆளுநரின் அழைப்பை ஏற்று பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் உள்ள ஆளுநர் மாளிகையில், அம்மாநில முதல்வராக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்றார். அம்மாநில துணை முதல்வராக பாஜக-வின் சுஷில் குமார் மோடி பதவியேற்றார். ஆளுநர் கேசரிநாத் திரிபாதி இவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நிதீஷ் மீண்டும் முதல்வராகியுள்ள நிலையில், அவர் சட்டசபையில் இரண்டு நாட்களுக்குள் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த  நிலையில், பீகார் சட்டப்பேரவையில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நிதிஷ் குமார் தனது பெரும்பான்மையை நிரூபித்தார். 243 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் நிதிஷ் குமாருக்கு ஆதரவாக 131 வாக்குகளும் எதிராக 108 வாக்குகளும் கிடைத்தன.

இதற்கிடையில், நிதிஷ் குமாரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தது செல்லாது என்று அறிவிக்க கோரி பாட்னா உயர் நீதிமன்றத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ வழக்கு தொடுத்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை வரும் திங்கள் கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Nitish Kumar Bihar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment