பாகிஸ்தானை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு இதய அறுவை சிகிச்சை செய்வதற்காக தக்க நேரத்தில் மருத்துவ விசா வழங்கி, இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நடவடிக்கை எடுத்தார்.
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே காஷ்மீரில் எல்லை பிரச்சனை காரணமாக தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. மேலும், சமீபத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளும் ஒருவரையொருவர் ‘தீவிரவாத நாடு’ என ஐ.நா. சபையில் விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இம்மாதிரியான பல பிரச்சனைகளால், இந்தியாவில் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவ விசா தேவைப்படும் பாகிஸ்தானியர்களுக்கு பல நடைமுறை சிக்கல்களால் விசா வழங்க தாமதமாகிறது. இதனால், பெரும்பாலான சமயங்களில் மருத்துவ விசா தேவைப்படும் பாகிஸ்தானியர்கள், இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் உதவியை நாடுகின்றனர். மருத்துவ விசாவுக்காக விண்ணப்பிக்கும் பாகிஸ்தானியர்களுக்கு அதன் முக்கியத்துவத்தை ஆராய்ந்து, சுஷ்மா ஸ்வாராஜூம் தகுந்த நடவடிக்கை எடுத்து விசா வழங்க உதவி செய்கிறார்.
அந்த வகையில், பாகிஸ்தான் நாட்டின் கராச்சி பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு இந்தியாவில் இதய அறுவை சிகிச்சை செய்வதற்காக, மருத்துவ விசா வழங்கி சுஷ்மா ஸ்வராஜ் நடவடிக்கை எடுத்தார்.
அச்சிறுமியின் தாய் நீதா சோயிப், கடந்த 26-ஆம் தேதி, தன் மகளின் விசா விண்ணப்பத்தின் நகலை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அதில் சுஷ்மா ஸ்வராஜை டேக் செய்தார். அச்சிறுமியின் மருத்துவ விசா கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து நிலுவையில் இருப்பது அந்த விண்ணப்பத்திலிருந்து தெரியவந்தது. மேலும், “என் மகளுக்கு மருத்துவ விசா வழங்குங்கள் சுஷ்மா ஸ்வராஜ் மேடம். உங்களுக்கும் உங்கள் நாட்டுக்கும் நன்றியுடன் இருப்போம்”, என நீதா சோயிப் பதிவிட்டார்.
இதையடுத்து, சுஷ்மா ஸ்வராஜ் அச்சிறுமிக்கு மருத்துவ விசா வழங்கி நடவடிக்கை எடுத்தார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், “உங்கள் மகள் விரைவில் பூரண நலமடைய நாங்களும் கடவுளை பிரார்த்திக்கிறோம்”, என பதிவிட்டார்.
கடந்த ஜூன் மாதம், பாகிஸ்தானை சேர்ந்த 4 மாத ரோஹன் எனும் குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சைக்காக சுஷ்மா ஸ்வராஜ் மருத்துவ விசா வழங்கியது குறிப்பிடத்தக்கது. இதன்பின், இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய அக்குழந்தையின் தந்தை, “மருத்துவ விசாவுக்காக காத்திருக்கும் அனைத்து பாகிஸ்தானியர்களுக்கு தங்கள் நாட்டின் கதவை திறக்க வேண்டும் என சுஷ்மா ஸ்வராஜ்-ஐ நான் கேட்டுக்கொள்கிறேன். இது என்னுடைய தாழ்மையான கோரிக்கை”, என கூறினார். இருந்தாலும், குழந்தை ரோஹன் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.