மேற்குவங்க மாநிலத்தில் பசுக்களை கடத்தியதாக 2 இஸ்லாமியர்கள் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் ஜல்பாய்குரி மாவட்டம் துப்குரியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 3 மணியளிவில், துப்குரியில் உள்ள தடான் பகுதியில், வேன் ஒன்று சென்றுள்ளது. அந்த வேனில் 7 பசு மாடுகள் இருந்த நிலையில், வேன் வழி தவறி அந்த கிராமப்பகுதியில் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, வேனின் சத்தத்தை கேட்டு அப்பகுதிமக்கள் வேனை நிறுத்த முயற்சித்துள்ளதாகவும், ஆனால் வேன் நிற்காமல் சென்றதாக சொல்லப்படுகிறது.
இதனால், சாலையை மறித்து அந்த வேனை தடுத்து நிறுத்தியுள்ளனர் அப்பகுதி வாசிகள். அப்போது, வேனில் இருந்த 2 பேரை பிடித்த கிராமமக்கள் அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனையடுத்து, பசுவை கடத்தியதாக நினைத்து, அவர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட இருவரையும் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், அவர்கள் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் கால்நடை வர்த்தகர்களா அல்லது கால்நடைகளை கடத்திச் சென்றார்களா என்பது என்ன என்பது குறித்து உறுதிசெய்யப்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் அஸ்ஸாம் மாநிலத் துப்ரியைச் சேர்ந்த ஹபீஷூல் ஷெய்க் மற்றும் மேற்குவங்க மாநிலம் கூச்பெஹரை அன்வர் ஹூசைன் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல கடந்த ஜூன் மாதமும் ஒரு சம்பவம் அரங்கேறியது. நார்த் தினஜ்பூரில் உள்ள சோப்ரா பகுதியில் மூன்று இஸ்லாமியர்கள் அடித்துக் கொள்ளப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பசுவை முன்னிலைபடுத்தி மனிதர்களை கொலை செய்யும் நிகழ்வு என்பது இந்தியாவில் அதிகரித்துக் கொண்டு வருகிறது. பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களை ஈவு இரக்கமின்றி அடித்தே கொலை செய்யும் சம்பங்களில் ஈடுபடுவர்கள் மீது, மத்திய அரசும் மாநில அரசும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெரும்பலான மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.