/tamil-ie/media/media_files/uploads/2017/10/swiss-couple.jpg)
ஆக்ராவில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த தம்பதியர் தாக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய, 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
சுவிட்சர்லாந்த சேர்ந்த தம்பதியர் குவாண்டின் ஜெர்மி - மேரி ட்ரோக்ஸ் ஆகியோர், கடந்த செப்டர் 30-ம் தேதி இந்தியாவுக்கு சுற்றுலா வந்தனர். இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக இருவரும் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவுக்கு கடந்த 22-ம் தேதி சென்றனர். அப்போது, ஃபத்தேப்பூர் சிக்ரி ரயில் நிலையத்திலிருந்தபோது, இருவரையும் பின்தொடர்ந்த இளைஞர்கள் கும்பல், இந்தியில் கீழ்த்தரமான வார்த்தைகளால் பேசியும், அவர்கள் மீது கற்களை வீசியும் தொடர் தாக்குதல் நடத்தியது. இதனால், அவர்கள் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, அவர்கள் டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் 5 பேரும் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இதனிடையே, இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், காவல் துறையினருடன் இணைந்து செயல் திட்டம் வகுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரபிரதேச அரசுக்கு,
மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், மத்திய சுற்றுலா துறை அமைச்சர் கே.ஜே.அல்ஃபோன்ஸ் இச்சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேச அரசிடம் கேட்டறிந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.