கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரு மாநகராட்சி மேயராக சம்பத் ராஜ் என்ற தமிழர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு மாநகராட்சி மேயர் பதவிக்காலம் ஓராண்டு மட்டுமே. ஆண்டுக்கு ஒருமுறை மேயரும், துணை மேயரும் கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அதன்படி, மேயராக இருந்த பத்மாவதியின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்தது. இதையொட்டி, மேயர் மற்றும் துணை மேயரை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகள் தொடங்கியது. மேயர் பதவிக்கு மேயர் தேர்தலில் காங்கிரஸ் - மதசார்பற்ற கூட்டணி சார்பில், சம்பத்ராஜ் என்ற தமிழரும், பாஜக-வை சேர்ந்த முனிசாமி ஆகியோர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். துணை மேயர் பதவிக்கு மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் சார்பில் பத்மாவதி நரசிங்கமூர்த்தியும், பாஜக சார்பில் மமதா வாசுதேவ் ஆகியோரும் போட்டியிட்டனர்.
இதையடுத்து, நேற்று காலையில் தேர்தல் நடந்தது. ஆனால், தேர்தல் நடை முறைகள் தொடங்கி வாக்குகளை செலுத்துவதற்கு தயாரான போது, முறைகேடுகள் நடப்பதாக கூறி பாஜக-வினர் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியவாறு பாஜக-வினர் வெளிநடப்பு செய்தனர். இதனால், பாஜக-வினர் யாரும் அவையில் இல்லை. பாஜக-வினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்து கொண்டிருக்கும் வேளையிலேயே வாக்குப்பதிவு நடைமுறைகளை மண்டல ஆணையர் ஜெயந்தி தொடங்கினார்.
சம்பத் ராஜு-வுக்கு மதச்சார்பற்ற கட்சிகளும், சுயேட்சை உறுப்பினர்களும் ஆதரவு அளித்தனர். இதன் காரணமாக, சம்பத் ராஜ் 139 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மேயர் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்துக் கொண்ட மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த பத்மாவதி நரசிங்கமூர்த்தி துணை மேயராக தேர்வு செய்யப்பட்டார்.
பெருவாரியாக தமிழர்கள் வாழும் பெங்களூரு பெருநகரத்தில் 23 ஆண்டுகளுக்கு பின்னர், 51-வது மேயராக தமிழர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஏராளமான தமிழ் அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழராக இருந்தாலும் நீண்டகாலமாக பெங்களூருவில் தனது குடும்பத்தோடு வசித்து வரும் சம்பத் ராஜ், ஜீவனஹள்ளி வார்டு கவுன்சிலராக 2 முறை வெற்றி பெற்ற பொறியியல் பட்டதாரி ஆவார். காங்கிரஸ் கட்சியில் கடந்த 30 ஆண்டுகாலமாக பணியாற்றி வரும் இவர், கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.