மாணவர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு பரிசு பொருட்களை வாங்கி ஆசிரியர் தினமான இன்று தங்களுக்கு பிடித்த ஆசிரியர்களுக்கு பரிசளிப்பார்கள். ஆசிரியர் தினம் எதற்காக கொண்டாடுகிறோம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியத்தில்லை. சுதந்திர இந்தியாவின் முதல் துணை குடியரசு தலைவரும், இரண்டாவது குடியரசு தலைவருமான சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
ராதாகிருஷ்ணன் சென்னை மாநில கல்லூரியிலும், கல்கத்தா பல்கலைக்கழகத்திலும் ஆசிரியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் ஆசிரியர் பணிக்கு ஆற்றிய கடமைகளை நினைவு கூறும் விதமாகவும், மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ஆம் தேதி, அவருடைய பிறந்த நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆசிரியர் தினத்தை கொண்டாடும் விதமாக கூகுள் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய கூகுள் டூடுள் வடிவமைத்துள்ளது. அதில், G,O,O,L,E ஆகிய எழுத்துகள் மாணவர்கள் போன்றும், இரண்டாவதாக உள்ள G எழுத்து ஆசிரியர் போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் மாணவர்களுக்கு அறிவியல், சுற்றுச்சூழல், கணிதம், இசை, புவியியல் ஆகியவற்றை கற்பிப்பது போன்று கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நெட்டிசன்களை அதிகம் ஈர்த்துள்ளது.
அதேபோல், பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்துவதாகவும், ‘புதிய இந்தியா’ எனும் கனவை நாம் உணர்ந்து செயல்பட ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் பதிவிட்டார்.
ராதாகிருஷ்ணனை போல் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமும் பேராசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.