இளம் பெண் பெயரில் போலியான பேஸ்புக் கணக்கு துவங்கி, ஆபாச செய்திகள் அனுப்பிய கல்லூரி மாணவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
மும்பையில் உள்ள ஜுய்நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரனாவ் தீபாளி(18). இவர் அதேபகுதியில் வதித்து வரும் இளம்பெண்(17) ஒருவரின் பெயரில் போலியான பேஸ்புக் கணக்கை துவங்கியுள்ளார். மேலும், அந்த போலியான பெயரில் உருவாக்கப்பட்ட கணக்கில் இருந்து, அந்த இளம்பெண்ணின் நண்பர்கள் மற்றும் அவரது உறவினர்களுக்கு ஆபாசமான மெசேஜ் அனுப்பியிருக்கிறார் என சொல்லப்படுகிறது.அந்த மாணவரும், மாணவியும் ஒரே கல்லூரியில் படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இது தொடர்பாக அந்த இளம்பெண் தனது தந்தையுடன் வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், பிரனாவ் தீபாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/05/arrest.jpg)
இது குறித்து போலீஸார் கூறியதவது: மாணவியின் பெயரில் பேஸ்புக்கில் தொடங்கப்பட்ட அந்த போலியான பேஸ்புக் கணக்கில் இருந்து அவரது தோழிகள் மற்றும் உறவினர்களுக்கு "ப்ரண்ட் ரெக்வஸ்ட்" அனுப்பப்பட்டுள்ளது. தனது தோழி தான் என நினைத்து அந்த மாணவின் நண்பர்களும், தனது உறவினர் தான் என நினைத்து அவரது உறவினர்களும் அந்த நண்பர் கோரிக்கையை(ப்ரண்ட் ரெக்வஸ்ட்) ஏற்றுக் கொண்டனர். இதனையடுத்து அந்த கணக்கில் இருந்து ஆபாசமான மெசேஜ்கள் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து மாணவியின் தோழிகள் மற்றும் உறவினர்கள் அந்த மாணவிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அந்த மாணவி தனது பெயரில் போலியான கணக்கு உள்ளது என்பது குறித்து காவல் நிலையத்தில் கடந்த வாரம் புகார் அளித்தார்.
இது தொடர்பான விசாரணையில் தொழிற்நுட்ப நிபுணர்கள் உதவியுடன் அந்த போலியான கணக்கை தொடங்கியது யார் என்ற விவரத்தை சேகரித்தோம். இந்நிலையில், அந்த மாணவி வசிக்கும் பகுதியிலேயே வசித்து வரும் பிரனாவ் தீபாளி என்பவர் தான் போலியான கணக்கை துவங்கினார் என்பது தெரியவந்தது என்று கூறினர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட அந்த மாணவர், தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.