”பாஜக என்னை பார்த்து பயப்படுகிறது”: லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ்

ரயில்வே உணவகங்களுக்கு டெண்டர் விடுவதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் பின்னணியில் பாஜகவும், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் இருப்பதாகவும் லாலு பிரசாத்தின் மகனும், பீகார் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 2004-2009 காங்கிரஸ் ஆட்சியில், ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது 2006-ஆம் ஆண்டு உணவகங்களுக்கு டெண்டர் விடுவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, லாலு பிரசாத் யாதவ், அவருடைய மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. கடந்த 7-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தது.

மேலும், இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் பி.கே.கோயல், 2 தனியார் நிறுவனங்களின் இயக்குநர்கள் உள்ளிட்டோர் மீதும் இந்த முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்தது.

மேலும், கடந்த வெள்ளிக்கிழமை காலை லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக டெல்லி, பாட்னா, ராஞ்சி, ஒடிஷா, கோர்கான் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 12 இடங்களில் சி.பி.ஐ. அதிரடியாக சோதனை நடத்தியது.

1991-1993-ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஒருங்கிணைந்த பீகாரின் முதலமைச்சராக இருந்தபோது மாட்டுத்தீவனம் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக, லாலு பிரசாத் யாதவிற்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பின் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், மீண்டும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது அவருக்கு மீண்டும் நெருக்கடியை தந்துள்ளது.

இந்நிலையில், பீகாரில் நிலவிவரும் பதற்றமான அரசியல் சூழ்நிலையில், முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் புதன் கிழமை கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் பாஜகவும், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் இருப்பதாகவும் தெரிவித்தார்.

”இது பாஜகவின் பழிதீர்க்கும் முயற்சி. அவர்கள் என் தந்தையை பார்த்து பயப்படுகின்றனர். இப்போது என்னையும் பார்த்து பயம் கொள்கின்றனர். 2004-ஆம் ஆண்டில் எனக்கு 14 வயது தான் இருக்கும். அப்போது எனக்கு மீசை கூட வளரவில்லை. அப்புறம் எப்படி ஒரு சிறுவன் இவை எல்லாவற்றையும் செய்ய முடியும் என பாஜக நினைக்கிறது?”, என கேள்வி எழுப்பினார்.

×Close
×Close