அரசு விழாவை புறக்கணித்த தேஜஸ்வி யாதவ்: பீகார் அரசியலில் குழப்பம்

இதனால், தேஜஸ்விக்கு அமைக்கப்பட்டிருந்த இருக்கையின் முன்னிருந்த பெயர் பலகை முதலில் மறைக்கப்பட்டு, பின்னர் முழுவதுமாக அகற்றப்பட்டது.

பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், முதலமைச்சர் நிதிஷ் குமார் கலந்துகொண்ட அரசு விழாவில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்த சம்பவம், ஆளும் ஐக்கிய ஜனதா கட்சிக்கும், கூட்டணி கட்சியான ராஷ்டிரிய ஜனதா தள கட்சிக்கும் பிரிவு ஏற்பட்டுள்ளதை உணர்த்துவதாக அமைந்தது.

கடந்த 2004-2009 காங்கிரஸ் ஆட்சியில், ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது 2006-ஆம் ஆண்டு உணவகங்களுக்கு டெண்டர் விடுவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, பீகார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மீது சி.பி.ஐ கடந்த 7-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தது. மேலும், அவருடைய மனைவி ராப்ரி தேவி, லாலுபிரசாத்தின் மகனும், பீகார் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீதும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. அன்றைய தினமே லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக டெல்லி, பாட்னா, ராஞ்சி, ஒடிஷா, கோர்கான் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 12 இடங்களில் சி.பி.ஐ. அதிரடியாக சோதனை நடத்தியது.

1991-1993-ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஒருங்கிணைந்த பீகாரின் முதலமைச்சராக இருந்தபோது மாட்டுத்தீவனம் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக, லாலு பிரசாத் யாதவிற்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பின் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், மீண்டும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது அவருக்கு மீண்டும் நெருக்கடியை தந்துள்ளது.

இந்த முறைகேடு புகாரின் பின்னணியில், பாஜக, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் இருப்பதாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, குற்றச்சாட்டுக்கு ஆளான துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவை, முதலமைச்சர் நிதிஷ் குமார் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது. இதனால் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்திற்கும், கூட்டணி கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கும் விரிசல் ஏற்பட்டுள்ளது. தேஜஸ்வி யாதவ் தன்னை குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும் என ஐக்கிய ஜனதா தளம் கூறி வருகிறது.

இந்நிலையில், பாட்னாவில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் தேஜஸ்வி யாதவ் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், அவர் கலந்துகொள்ளவில்லை. திட்டமிட்டபடி முதலமைச்சர் நிதிஷ் குமார் கலந்துகொண்டார். இதனால், தேஜஸ்விக்கு அமைக்கப்பட்டிருந்த இருக்கையின் முன்னிருந்த பெயர் பலகை முதலில் மறைக்கப்பட்டு, பின்னர் முழுவதுமாக அகற்றப்பட்டது.

இந்நிகழ்வின் மூலம் இருகட்சிகளுக்குமிடையே பூசல் ஏற்பட்டுள்ளது தெளிவாகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close