பீகார் மெகா கூட்டணியில் எந்தவொரு பிளவும் இல்லை எனவும், துணை முதலமைச்சர் பதவியிலிருந்து தன் மகன் தேஜஸ்வி யாதவ் விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.
கடந்த 2004-2009 காங்கிரஸ் ஆட்சியில், ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது 2006-ஆம் ஆண்டு உணவகங்களுக்கு டெண்டர் விடுவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, லாலு பிரசாத் யாதவ், அவருடைய மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. கடந்த 7-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தது.
மேலும், அவருக்கு சொந்தமான 12 இடங்களில் அதிரடி சோதனையும் நடத்தப்பட்டது.
இந்த முறைகேடு புகார் எழுந்ததிலிருந்து ராஷ்டிரிய ஜனதா தள கட்சிக்கும், ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சிக்கும் பிளவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. மேலும், துணை முதலமைச்சர் பதவியிலிருந்து தேஜஸ்வி யாதவ் பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், புதன் கிழமை நடைபெற்ற கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு பிறகு லாலு பிரசாத் யாதவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேஜஸ்வி யாதவ் பதவி விலக மாட்டார். தேஜஸ்வி பதவி விலக வேண்டும் என நிதிஷ்குமார் சொல்லவில்லை. எனக்கும் நிதிஷ் குமாருக்கும் எந்தவித மனக்கசப்பும் இல்லை. ஊடகங்கள் எங்களது கூட்டணியில் பிளவை ஏற்படுத்த முயல்கின்றன. நாங்கள் தான் மெகா கூட்டணியை உருவாக்கி, நிதிஷ் குமாரை முதலமைச்சராக்கினோம். அப்படியிருக்கையில், பிரிய வேண்டும் என நாங்கள் எப்படி நினைப்போம்?”, என கூறினார்.
இதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், “நான் பதவி விலக வேண்டும் என முதலமைச்சர் கூறவில்லை. பாஜக அல்லாத மாநிலங்களில் அரசை நிலையற்றதாக பாஜக மேற்கொண்டு வரும் முயற்சிகளில் இதுவும் ஒன்று.”, என கூறினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, முதலமைச்சர் நிதிஷ் குமார் கலந்துகொண்ட அரசு விழா ஒன்றில் தேஜஸ்வி யாதவ் திட்டமிட்டபடி கலந்துகொள்ளவில்லை. இதனால் பீகார் அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, ஓரிரு நாட்களில் தேஜஸ்வி யாதவ் முதலமைச்சரை நேரில் சந்தித்து அரசியல் நிலவரம் குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.