scorecardresearch

தெலங்கானாவில் ஜே.பி. நட்டா போஸ்டர் வைத்து கல்லறை; பா.ஜ.க – டி.ஆர்.எஸ் தலைவர்கள் சர்ச்சை

தெலங்கானா மாநிலம் முனுகோட் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டா போஸ்டரை வைத்து கல்லறை அமைத்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை எற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவில் ஜே.பி. நட்டா போஸ்டர் வைத்து கல்லறை; பா.ஜ.க – டி.ஆர்.எஸ் தலைவர்கள் சர்ச்சை

தெலுங்கானா மாநிலம், சௌடுப்பல் மாவட்டத்தில் உள்ள மல்காபூரில் புதிதாக மணலால் மூடப்பட்ட கல்லறையின் ஒரு முனையில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் படம் உள்ள போஸ்டரைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பா.ஜ.க தலைவர்களின் கோபத்தை தூண்டியுள்ளது.

ஜே.பி. நட்டா போஸ்டரை வைத்து மணல் மூடி கல்லறை அமைத்துள்ள வீடியோவை ஆந்திரப் பிரதேச பா.ஜ.க பொதுச் செயலாளர் விஷ்ணுவர்தன் ரெட்டி சமூக ஊடகங்களில் முதலில் பகிர்ந்து கண்டனம் தெரிவித்தார். இப்பகுதி முனுகோடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதி. அங்கே நவம்பர் 3-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இது டி.ஆர்.எஸ் தொண்டர்களின் வேலை என்று விஷ்ணுவர்தன் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். “இது வெறுக்கத்தக்கது! டி.ஆர்.எஸ் தொண்டர்கள் எங்கள் தலைவருக்கு கல்லறை அமைத்துள்ளனர். இது டி.ஆர்.எஸ் கட்சி தரத்தை தாண்டி மிகவும் அருவருப்பானது” என்று அவர் விஷ்ணுவர்தன் ட்வீட் செய்துள்ளார்.

ஜே.பி. நட்டா போஸ்டரை வைத்து கல்லறை அமைக்கப்பட்டதைக் கண்டித்து, போலீசில் புகார் செய்வோம் என்று தெலுங்கானா பா.ஜ.க தலைவர் என்.வி சுபாஷ் கூறியதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில் கல்லறையைப் போல மணல் மேடாகக் குவித்து, அந்த மணல் மேடு மீது புதிய மாலைகள் போடப்பட்டுள்ளது. சௌட்டுப்பல், பிராந்திய ஃவுளூரைடு தணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் என்று எழுதப்பட்ட ஒரு அடையாளப் பலகையின் கீழ் நட்டாவின் புகைப்படம் உள்ளது. இந்த வீடியோவின் முடிவில், நான்கு பேர் அந்த இடத்தை விட்டு விலகிச் செல்வதைப் பார்க்க முடிகிறது.

யாதாத்ரி புவனகிரி மாவட்ட காவல்துறை துணை ஆணையர் நாராயண் ரெட்டி, சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வெளியாகி இருப்பது தனக்கு தெரியவந்தது என்று கூறினார். “இது எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை யாரும் புகார் அளிக்கவில்லை. முதலில் மண் மேடு உருவாக்கப்பட்டு அதன் மீது பாஜக தலைவரின் ஃப்ளெக்ஸ் அமைக்கப்பட்டதா அல்லது அதற்கு நேர்மாறாக அமைக்கப்பட்டதா என்பதைக் கண்டுபிடிப்பது கடினம். என்ன நடந்தது என்பதை அறிய ஒரு குழுவை அனுப்பியுள்ளேன். அதை யார் செய்தார்கள் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது” என்று கூறினார்.

இதன் சம்பத்தின் பின்னணியில் டி.ஆர்.எஸ் தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று டி.ஆர்.எஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். நல்கொண்டா எம்.எல்.ஏ பூபால் ரெட்டி கூறுகையில், டி.ஆர்.எஸ் தொண்டர்கள் ஒருபோதும் இதுபோன்ற செயலை செய்ய மாட்டார்கள். அதிருப்தி அடைந்த பா.ஜ.க உறுப்பினர்கள் அதைச் செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அவர்கள் இப்போது டி.ஆர்.எஸ் மீது குற்றம் சாட்டுகிறார்கள். டி.ஆர்.எஸ் தொண்டர்கள் ஏன் இப்படிச் செய்ய வேண்டும்” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த சம்பவத்திற்கு பா.ஜ.க தேசியத் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து ராஜ்யசபா எம்.பி ஜோதிராதித்ய சிந்தியா இந்தியில் ட்வீட் செய்துள்ளார்: தெலுங்கானாவில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு அதிகரித்து வருவதால், டி.ஆர்.எஸ் பீதியடைந்துள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் அதன் தோல்வி உறுதி. டி.ஆர்.எஸ் இந்த கண்டிக்கத்தக்க செயலை செய்துள்ளது. போதுமான அளவு கண்டிக்கப்படவில்லை. வரும் நாட்களில் இந்த செயலுக்கு மாநில மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை இந்திய அரசியலில் ஒரு புதிய கீழ்மைத் தனம் என்று கூறிய மத்திய அமைச்சரவை அமைச்சர் ஸ்மிருதி இரானி, வினாச காலமே விபரீத புத்தி ஒருவரின் முடிவு நெருங்கும்போது, அவர்களின் சிந்திக்கும் திறன் மறைந்துவிடும் என்ற இந்தி பழமொழியை குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் அரசியலில் ஒரு குழப்பமான, அவமானகரமான புதிய கீழ்மையைக் குறிக்கிறது என்று கூறிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, தெலுங்கானாவில் பா.ஜ.க-வுக்கு சவால் விட விரும்பும் கட்சிகள் எங்கள் வேகத்தால் எவ்வாறு பயமுறுத்தப்படுகின்றன என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Telangana video jp nadda grave bjp vs trs leaders