எதிர்வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை இரு பிரதான கட்சிகள் திமுக, அதிமுக. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடித்து வருகிறது. அதேபோன்று, அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர், துணை முதல்வர் உட்பட அதிமுகவின் முக்கிய புள்ளிகள் அனைவரும், 'பாஜகவுடன் கூட்டணி இல்லை' என்று இதுவரை கூறாத போது, அதிமுக எம்.பி. தம்பிதுரை மட்டும் கடந்த சில வாரங்களாக பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் அதிமுக தலைவர்கள், 'பாஜகவை விமர்சிப்பது தம்பிதுரையின் தனிப்பட்ட கருத்து' என்று சொல்லி ஒதுங்கிக் கொள்கின்றனர். தம்பிதுரையும், 'பாஜக என்னை விமர்சித்து பேசுவதால், நான் அவர்களை விமர்சித்து பேசுகிறேன்' என்கிறார்.
பாஜகவுடனான கூட்டணியைப் பொறுத்தவரை முதல்வர் பழனிசாமி பெரிதும் ஆர்வம் காட்டவில்லை என்றே கூறப்படுகிறது. ஆனால், துணை முதல்வர் ஓ.பி.எஸ் உட்பட மிகச் சிலர் மட்டுமே பாஜக கூட்டணியை நாடுவதாக கூறப்படுகிறது. அதற்கு 'பல' காரணங்களும் குறிப்பிடப்படுகின்றன.
இருந்தாலும், இவையனைத்தையும் கடந்து அதிமுக - பாஜக இடையே தொகுதிப் பங்கீடு குறித்து ரகசியமாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அதில் அதிமுகவின் ஃபேவரைட் தொகுதிகளில் பாஜக கை வைப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உதாரணமாக தென் சென்னை, மதுரை உள்ளிட்ட அதிமுகவின் சில முக்கிய தொகுதிகளை பாஜக கேட்பதாக கூறப்படுகிறது. இதில், அதிமுகவுக்கு உடன்பாடில்லை என்றும், பாஜகவுக்கு 6 தொகுதிகளை மட்டும் ஒதுக்க அதிமுக முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படியாக, இவ்விரு கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடித்து வருவதாக தெரிகிறது. கொள்கை கூட்டணியாக இல்லாமல், தொகுதிப் பங்கீடு கூட்டணியாகவே அதிமுக - பாஜக கூட்டணி அமைய வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மக்களவையில் இன்று பட்ஜெட் விவாதக் கூட்டம் நடைபெற்றது. இதில், பேசிய அதிமுக எம்.பி. தம்பிதுரை, பாஜகவின் பல திட்டங்களை கடுமையாக விமர்சித்து பேசியிருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக திட்டங்களை விமர்சித்த தம்பிதுரை
தம்பிதுரை மக்களவையில் பேசுகையில், "இந்த இடைக்கால பட்ஜெட்டில் மக்களைக் கவரும் ஏராளமான கவர்ச்சித் திட்டங்கள் இருக்கின்றன. கடந்த 4 ஆண்டுகளில் இதை அறிவித்திருக்கலாம். ஆனால், அப்போதெல்லாம் அறிவிக்கவில்லை. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் என்பது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைப் பஞ்சம் நிலவுகிறது.
ஏறக்குறைய 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று வாக்குறுதி அளித்தது என்னாயிற்று? பிரதமரின் 'விவசாயிகள் திட்டம்' என்பது நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டும் பொருந்துகிறது. நிலம் இல்லாத விவசாயிகளுக்கு உதவவில்லை.
என்னுடைய தொகுதியில் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகள் அனைத்தும் முறையாகக் கட்டப்படவில்லை. நகரில் இருந்து ஒரு கிலோமீட்டருக்கு அப்பால் இவை கட்டப்பட்டுள்ளன. மிக தொலைவில் உள்ள கழிப்பறைகளை பெண்கள் எவ்வாறு பயன்படுத்த முடியும்? பிரதமர் மோடி, மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்கப்படுத்தி வருகிறார், பேசி வருகிறார். ஆனால், சீனாவில் இருந்து தயாரிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே வாங்கப்படுகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மக்கள் வாங்குவதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்தது?
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறுதொழில்கள், அமைப்பு சாரா தொழில்கள் அனைத்தும் நசிந்து, அழிந்துவிட்டன. மாநிலங்களின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டுவிட்டன. தமிழகத்துக்கு மட்டும் மத்திய அரசு தர வேண்டிய நிதி ரூ.12 ஆயிரம் கோடி நிலுவையில் இருக்கிறது. மத்திய அரசு தராமல் இன்னும் தாமதிக்கிறது. இதுதான் கூட்டாட்சியா?. எந்த விதமான பணமும் இல்லாமல் எங்கள் மாநிலத்தை எவ்வாறு மேம்படுத்த முடியும்" என்று அனல் பறக்க பேசியுள்ளா தம்பிதுரை.
ஒருபக்கம் தேர்தல் கூட்டணி குறித்தும், தொகுதிப் பங்கீடு குறித்தும் அதிமுக பேசி வரும் நிலையில், மறுபக்கம் மக்களவையில் பாஜக திட்டங்களை கிழித்து தொங்கவிட்டுள்ளது. இதனால், உண்மையில் அதிமுக நிலைப்பாடு என்ன என்பதில் குழப்பமே நீடிக்கிறது.
தம்பிதுரையின் தாக்குதலுக்கு என்ன காரணம்?
பாஜகவை தம்பிதுரை அதிகளவும் தாக்கிப் பேசுவதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஒன்று, அவரது கரூர் தொகுதி
இரண்டாவது, மறைமுகமாக அதிமுக சார்பில் மிரட்டலை வெளிப்படுத்துவது.
கரூர் தான் தம்பிதுரையின் மக்களவைத் தொகுதி. அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தால், கரூரில் மீண்டும் தான் ஜெயிப்பதில் சிக்கல் ஏற்படும் என்று தம்பிதுரை கருதுவதாக கூறப்படுகிறது.
அதேபோன்று, தொகுதிப் பங்கீட்டில் பாஜக சில முக்கிய தொகுதிகளை கேட்பதால், அதைத் தர மறுப்பது போன்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்த தம்பிதுரை மூலம் அதிமுக தலைமை முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. அதன் வெளிப்பாடே இன்று மக்களவையில் தம்பிதுரையின் காட்டமான உரைக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
எது எப்படியோ, எதிர்வரும் நாட்களில் கூட்டணி குறித்தும், தொகுதிப் பங்கீடு குறித்தும் பல சுவாரஸ்ய, அதிர்ச்சி திருப்பங்களை நாம் எதிர்பார்க்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.