Lok Sabha | 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது பயங்கரபாத தாக்குதல் நடைபெற்று அது முறியடிக்கப்பட்டது. இதன் 22ஆவது வருட நினைவுநாள் இன்று (டிச.13) அனுசரிக்கப்பட்டது.
இதற்கிடையில் தற்போது புதிய நாடாளுமன்றத்தில் குளிர்காலத் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அப்போது இன்று மதியம் 2 பேர் மக்களவையில் பார்வையாளர் அரங்கில் குதித்தனர். தொடர்ந்து அவர்கள் மஞ்சள் நிறத்தில் புகையை வீசினர்.
மற்றொரு நபர் சபாநாயகர் இருக்கையை நோக்கி சென்றுள்ளார்.
மேலும், இருவரும் ‘சர்வாதிகாரத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம்’ என்று இந்தியில் கத்திக்கொண்டே ஓடியுள்ளனர். இந்தப் பதற்றமான சூழ்நிலையில் சில எம்.பி.க்கள் அச்சம் அடைந்தனர்.
இந்த நிலையில் இருவரும் பாதுகாவலர்களால் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒரு ஆணும் ஒரு பெண்ணும் புகையை வீசிக் கொண்டு ஓடினர்.
இந்தச் சம்பவத்தின்போது பிரதமர் மோடி அவையில் இல்லை. அவை நடவடிக்கையின்போது அவைத் தலைவராக பாஜக எம்.பி. ராஜேந்திர அகர்வால் செயல்பட்டார். சம்பந்தப்பட்ட நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
தமிழக தலைவர்கள் கேள்வி
மு.க. ஸ்டாலின்
“நாடாளுமன்றத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்புக் குளறுபடிகள், நமது ஜனநாயகக் கோவிலுக்கு ஆபத்தான அச்சுறுத்தலாக உள்ளது.
இதில், தாமதமின்றி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடி விசாரணையைத் தொடங்கவும், தவறை சரிசெய்யவும், எதிர்காலத் தவறுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைச் செயல்படுத்தவும், பாதுகாப்பை அனைத்து வலிமையுடன் உறுதிப்படுத்தவும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்” என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
கனிமொழி
இதற்கிடையில், நாடாளுமன்றத்தில் புகை வீசப்பட்ட சம்பவத்துக்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கனிமொழி, “புதிய நாடாளுமன்ற கட்டிட அமைப்பு மற்றும் பாதுகாப்பில் பெரிய அளவில் குறைபாடு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “அவைக்குள் எளிதாக ஊடுவருவக் கூடிய வகையில் பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் இருக்கக் கூடிய அவையில் பாதுகாப்பு குறைபாடு இருக்கிறது என்றால் யார்தான் இதற்கு பொறுப்பு?
அரசை எதிர்ப்போரை தேசவிரோதி என முத்திரை குத்தும் பாஜக, அவை பாதுகாப்பு குறைபாடு பற்றி என்ன சொல்லப் போகிறது?" எனக் கேள்வியெழுப்பினார்.
காங்கிரஸ் எம்.பி. ஜோதி மணி
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் ஆடம்பரத்திற்கு கொடுத்த முக்கியத்துவம் பாதுகாப்புக்கு கொடுக்கப்படவில்லை என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அன்புமணி ராமதாஸ்
"வண்ணப்புகைக் குப்பிகளுடன் நுழைய முடியும் போது துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் ஆகியவற்றுடன் ஏன் நுழைய முடியாது?" என அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பி உள்ளார்.
காங்கிரஸ் செல்வபெருந்தகை
இந்திய ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றத்தின் மக்களவையில் அத்துமீறி நுழைந்து, கலர் பாம் வீசிய செயல் மிகுந்த மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இச்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இச்சம்பவத்தின் மூலம் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
"நாடாளுமன்றத்தில் புகைக் குப்பி வீசப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது, அதில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை; மத்திய அரசு இந்த விவகாரத்தில் உரிய விசாரணையை மேற்கொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்; புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கான ரூ. 6,000 நிவாரணத் தொகையை அடுத்த 3 நாட்களில் வழங்க ஆரம்பித்து விடுவோம்" என தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“