மனிதக்கழிவுகளை தன் கையால் அள்ளியவர் ஹரியானாவை சேர்ந்த கௌஷல் பன்வார். தலித் குடும்பத்தில் பிறந்த இவர், தன் பெற்றோருடன் சேர்ந்து இளம் வயதில் மனிதக்கழிவுகளை கையால் அள்ளும் தொழிலை மேற்கொண்டார்.
பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும்போது சமஸ்கிருதம் பாடத்தின் மீது அவருக்கு ஆர்வம் தொற்றியது. ஆனால், அவருடைய ஆசிரியர், தலித் என்கிற காரணத்தை சுட்டிக்காட்டி சமஸ்கிருதம் பாடத்தை படிக்க அனுமதிக்கவில்லை. அவருடைய பெற்றோர் மேற்கொள்ளும் வேலையையே கௌஷலை செய்ய சொன்னார் அந்த ஆசிரியர். ஆனால், அன்று சமஸ்கிருதம் படிக்க அனுமதி மறுக்கப்பட்ட கௌஷல் மீண்டு எழுந்து அதே பாடத்தில் பி.எச்.டி. பட்டம் பெற்று தற்போது பேராசிரியராக உள்ளார் என்பதை படிக்கும்போது வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம், ஆனால், அந்த உயரத்தை அடைய கௌஷால் அடைந்த துயரங்கள் பல.
கௌஷலை சமஸ்கிருதம் படிக்க அனுமதிக்காத அந்த ஆசிரியர், அவருடைய ஆர்வத்தைக் கண்டு சமஸ்கிருதம் படிக்க வகுப்பிற்குள் அனுமதித்தார். ஆனால், ஒரு கட்டளையுடன். கௌஷல் வகுப்பில் கடைசி வரிசையில் தான் அமர வேண்டும். அதனையும் கௌஷல் ஏற்றுக்கொண்டார். படிக்கும்போதே, தன் பெற்றோருடன் கையால் மலம் அள்ளும் தொழிலையும் மேற்கொண்டார்.
படிப்பில் கெட்டிக்காரராக இருந்தார் கௌஷல். கேள்விகளுக்கு சரியான பதிலைக் கூறும்போதெல்லாம், மற்ற ’உயர்ந்த’ சமூகத்தை சேர்ந்த மற்ற மாணவர்கள் அவரை வசைபாடினர். அவருடைய சமூகத்தின் பெயரால் மற்ற மாணவர்கள் கேலி செய்தனர்.
“குழந்தைப்பருவம், இளம்பருவம் என எல்லா வயதிலும், பள்ளி, ஹரியானா கல்லூரி, டெல்லி பல்கலைக்கழகம் என எல்லா இடங்களிலும், நான் என் சாதியின் பெயராலேயே அடையாளப்படுத்தப்படுகிறேன். சாதி ஏற்றத்தாழ்வு இந்தியாவில் ஒழிந்துவிடவில்லை. அது தன்னுடைய கோர முகத்தை அவ்வப்போது மாற்றிக்கொண்டு மட்டுமே உள்ளது”, என கௌஷல் ஒருமுறை கூறியிருக்கிறார்.
சமஸ்கிருதம் படித்தபோதுதான் சாதிகளைப் பற்றியும், இந்தியா எவ்வாறு சாதிய சமூகமாக உள்ளது என்பதைக் குறித்தும் கௌஷல் அறிந்துகொண்டார். சமஸ்கிருதம் பாடத்தில் பி.எச்.டி. பட்டமும் பல தடைகளைத் தாண்டி பெற்றார். இப்போது டெல்லியில் உள்ள மோதிலால் நேரு கல்லூரியில் சமஸ்கிருத துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இப்போதும், அவர் தன் சாதியின் பெயரால் அவமானப்படுத்தப்படுகிறார். ஆனால், அவர்களுடைய வசவுகளையும் ,கேலிகளையும் புறந்தள்ளி சென்று கொண்டே இருப்பதுதான் தன்னுடைய வெற்றி என்கிறார் கௌஷல்.