கேரள சிறையில் அடைக்கப்பட்ட 4 வயது சீன நாட்டு சிறுமி

விசா காலம் முடிந்தும் தங்கியிருந்த குற்றச்சாட்டில் நான்கு வயதேயான சீன நாட்டை சேர்ந்த சிறுமி, கேரள சிறையில் அடைக்கப்பட்டு பெரும் துயரத்துக்குள்ளாகி உள்ளார்.

விசா காலம் முடிந்தும் தங்கியிருந்த குற்றச்சாட்டில் நான்கு வயதேயான சீன நாட்டை சேர்ந்த சிறுமி ஒருவர் கேரள சிறையில் அடைக்கப்பட்டு பெரும் துயரத்துக்குள்ளாகி உள்ளார்.

சீன நாட்டை சேர்ந்த பெண் ஜியாலோய்ன், அவரது நான்கு வயது மகள் ஹான் ரியு ஹௌ. இவரது மாமா சொங் குய் ஹௌ. இவர்கள் அனைவரும் சீன நாட்டை சேர்ந்தவர்கள். கேரள மாநிலம் காக்கநாட்டில் அம்மாநிலத்தை சேர்ந்த ஒருவருடன் இணைந்து வாடகை வீட்டில் தங்கியிருந்துள்ளனர். ஆனால், அவர்களது விசா காலம் முடிவடைந்த பின்னரும் அவர்கள் இங்கு தங்கியிருந்துள்ளதாக தெரிகிறது.

சோதனை ஒன்றில் இதுகுறித்து தகவலறிந்த கேரள போலீசார், அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிமன்றம், அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. சிறுமியின் வயது, தாயாரை பிரிந்து அச் சிறுமியால் இருக்க முடியாது, இங்கு வேறு உறவினர்கள் யாரும் இல்லை என்பன உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்ட நீதிமன்றம், அவரது தாயாருடன் சேர்த்து சிறுமியையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

அதன்படி, தயார் மற்றும் வேறு சில பெண்கள் உடன் சிறையில் அச் சிறுமி அடைக்கப்பட்டுள்ளார். விளையாட பொம்மைகள் இல்லாமல், ஒரு அறைக்குள் மொழி தெரியாத நபர்களுடன் அடைக்கப்பட்ட சிறுமி மிகவும் வேதனைக்கு உள்ளாகியுள்ளார். சிறுமிக்கு சீன நாட்டு உணவை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அத்தகைய உணவை வழங்குவது கடினமாக இருந்த காரணத்தால், சிறையில் மற்ற கைதிகளுக்கு வழங்கும் உணவையே சிறை காவலர்கள் சிறுமிக்கும் வழங்கியுள்ளனர். மேலும், சிறுமிக்கு பழம், பால் உள்ளிட்டவற்றையும் வழங்கியதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இவர்களுடன் வாடகை வீட்டில் தங்கியிருந்த கேரள மாநிலத்தை சேர்ந்த நபர் தப்பியோடிவிட்டார்.

இந்த வழக்கில் சிறுமிக்கும், அவரது தாயாருக்கும், உறவினருக்கும் கடந்த சனிக்கிழமையன்று எர்ணாகுளம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி சிறு நிவாரணம் அளித்துள்ளது. கடுமையான நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியுள்ள போதும், மனிதாபிமான அடிப்படையில் ஜாமீன் வழங்குவதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

அவர்களது விசா காலம் ஏற்கனவே முடிவடைந்து பின்னரும் அவர்கள் தங்கியிருந்த குற்றச்சாட்டில் தான் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். எனவே, ஜாமீன் கிடைத்தாலும் அவர்களால் சுதந்திரமாக இருக்க முடியாது. ஏனெனில், சிறையில் இருந்து அவர்கள் வெளியேறும் தருணத்திலும், அதே குற்றத்தை தான் அவர்கள் செய்து கொண்டிருப்பார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

சிறுமி, அவரது தாயார் மற்றும் உறவினர் ஆகியோர் சுதந்திரமாக இருக்க வேண்டுமானால், இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் தலையீடு தேவை என அவர்களது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close