மகாத்மா காந்தி வரிசை 2005-ன் கீழ் புதிய ரூ.20 நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது #DeMonetisation என மத்திய அரசு, கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதியன்று திடீரென அதிரடியாக அறிவித்தது. தொலைக்காட்சி மூலம் அன்றைய தினம் இரவில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதேசமயம், புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளையும் மத்திய அரசு வெளியிட்டது. அதேபோல், செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி, அஞ்சலகங்கள் உள்ளிட்ட இடங்களில் கொடுத்து அதனை செல்லத்தக்க புதிய ரூபாய் நோட்டுகளாக, 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வரை மாற்றிக் கொள்ளலாம் எனவும் மத்திய அரசு அறிவித்தது. ஆனால், ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, அதனை பலமுறை மாற்றியும் அமைத்தது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஒரு சாரார் புகழ்ந்தாலும், பல்வேறு தரப்பினர் தங்களது கடும் எதிர்ப்பை இன்றளவும் தெரிவித்து வருகின்றனர். அதிக மதிப்புடைய புதிய ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டதால் சில்லறைத் தட்டுப்பாடு நிலவியது. இதனால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.
இந்நிலையில், மகாத்மா காந்தி வரிசை 2005-ன் கீழ் புதிய ரூ.20 நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
"தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.20 மாதிரியே தான் புதிய ரூ.20 நோட்டுகளும் இருக்கும். ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கையெழுத்துடன் வரும் புதிய ரூ.20 நோட்டுகளின், இரு பக்க நம்பர் பேனலினுள்ளும் ஆங்கில எழுத்து "S" இருக்கும். பின் பக்க வண்ணத்தில் மாற்றம் இருக்காது. முன் பக்க வண்ணம் லேசாக மங்கியிருக்கும்" என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேசமயம், பழைய ரூ.20 நோட்டுகள் செல்லத்தக்க நோட்டுகளாகவே தொடரும் எனவும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, புதிய ரூ.200 நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வரும் எனவும், அதனை அச்சிடுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதாவும் இந்த மாத தொடக்கத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.