இஸ்லாமிய மதத்தில் பின்பற்றப்படும் விவாகரத்து நடைமுறையான முத்தலாக் விவகாரம் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கெஹர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.
இஸ்லாமிய மதத்தில் ஷரியத் சட்டத்தை பின்பற்றி தனது மனைவியை ஒருவர் "முத்தலாக்" கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இதனால், பாதிப்படைந்த பெண்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்டோர் தொடர்ந்த 7 மனுக்கள் மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மனுக்களை கடந்த மார்ச் 30-ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், மனுக்களை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என அறிவித்தது. அதையடுத்து, தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கெஹர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது.
இந்த விசாரணையில் மத்திய அரசு, அனைத்து இந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம், அனைத்து இந்திய இஸ்லாமிய பெண்கள் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் பிற தரப்புகள் தங்கள் வாதங்களை முன்வைத்தன.
முத்தலாக் முறையில் இஸ்லாமிய பெண்களின் உரிமை பறிக்கப்படுவதாக மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
ராமர் அயோத்தியில் பிறந்தார் என்ற நம்பிக்கைக்கு இணையானது முஸ்லிம்கள் முத்தலாக் முறை மீது கொண்டுள்ள நம்பிக்கை என உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார்.
முத்தலாக் நடைமுறை முஸ்லிம்களால் 1400 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. மத நம்பிக்கை அடிப்படையிலான இந்த வழக்கத்தை நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வாதிட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த மே மாதம் 18-ம் தேதி முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து, முத்தலாக் விவகாரத்தில் ஆகஸ்ட் 22-ம் தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதன்படி, முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜெ.எஸ்.கெஹர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று வழங்கவுள்ளது.
"முத்தலாக்" வழக்கம் இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமையா? இஸ்லாமிய தனிநபர் சட்டத்தில் நீதிமன்றம் தலையிட்டு திருத்தும் செய்ய முடியுமா என்பது குறித்து மட்டுமே தீர்ப்பு அளிப்போம் என்றும் நீதிபதிகள் ஏற்கனவே கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.