இதர பிற்படுத்தப்பட்டோர் அனைவரும் இடஒதுக்கீட்டின் சலுகையை பெறுவதை உறுதி செய்யும் வகையில், மத்திய பட்டியலில் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை துணை வகைப்படுத்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, "இதர பிற்படுத்தப்பட்டோர் அனைவரும் இடஒதுக்கீட்டின் சலுகையை பெறுவதை உறுதி செய்யும் வகையில், மத்திய பட்டியலில் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை துணை வகைப்படுத்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது" என்றார்.
மேலும், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் சம உரிமை கிடைக்க முயற்சி எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்யும் பொருட்டு ஆணையம் ஒன்றை அமைக்க மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை வழங்கியுள்ளது என தெரிவித்த ஜெட்லி, ஆணையம் உருவாக்கப்பட்ட நாளில் இருந்து 12 வாரங்களில் தனது அறிக்கையை மத்திய அரசிடம் அந்த ஆணையம் தாக்கல் செய்யும் என்றும் தெரிவித்தார்.
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கவும், மத்திய அரசின் வேலை வாய்ப்புகளைப் பெறவும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு தற்போது 27 சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளது. இதனை பெறுவதற்கு ஓபிசி (இதர பிற்படுத்தப்பட்டோர்) சான்றிதழ் அவசியம். இந்த சான்றிதழை பெற வேண்டுமானால், பெற்றோரின் ஆண்டு வருமானம் (கிரிமிலேயர்) ரூ.6 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என்பது தற்போது அமலில் உள்ள விதி. இதனை ரூ.8 லட்சமாக உயர்த்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஓராண்டு காலமாக நிலுவையில் இருந்த சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறை அமைச்சகத்தின் இந்த பரிந்துரைக்கு தற்போது தான் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதேபோல், "தற்போதைய இட ஒதுக்கீடு கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. எதிர்காலத்திலும் இருக்காது. அது தொடர்பான எந்த பரிந்துரையும் மத்திய அரசுக்கு வரவில்லை. எனவே, இதே நிலை தொடரும்" எனவும் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இதர பிற்பட்டோர் பிரிவில் உள் ஒதுக்கீடு இருப்பது போல், தாழ்த்தப்பட்டோர் பிரிவில் உட்பிரிவு கொண்டு வரப்படுமா என்ற கேள்விக்கும், "எந்த மாற்றமும் இருக்காது" என்ற பதிலையே அருண் ஜெட்லி அளித்தார்.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இட ஒதுக்கீடு கொள்கையை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என அண்மையில் வலியுறுத்திய நிலையில், மத்திய அரசின் நிலைப்பாட்டை அருண் ஜெட்லி இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.