தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான பாலியல் வழக்கில் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதையடுத்து, ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் கலவரம் வெடித்துள்ளது.
தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். இவர், தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த இரண்டு பெண் சீடர்களை கடந்த 1999-ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக சிபிஐ கடந்த 2002-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. பெண் பக்தர்கள் இருவரை பாலியல் பலத்காரம் செய்ததாக குர்மீத் சிங் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது.
ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், அதன் மீதான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளி என பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், தண்டனை குறித்த விவரம் வருகிற 28-ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தீர்ப்பு வெளியான அடுத்த சில மணி நேரங்களில் கலவரம் வெடிக்கிறது. ஹரியானா, பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே திரண்ட கலவரக்காரர்களுக்கும், அவர்களை ஒடுக்க வந்த போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
கலவரத்தில் சிக்கி சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கலவரத்தில் சுமார் 70 மேற்பட்ட வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. அரசாங்க கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. கலவரம் தொடர்பாக இதுவரை 1000 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தலைநகர் டெல்லி வரை கலவரம் பரவியதால், டெல்லியின் 11 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊடக வண்டிகள், பத்திரிகையாளர்கள் மீதும் வன்முறையாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். பொய்யான குற்றச்சாட்டில் ராம் ரஹீம் சிக்க வைக்கப்பட்டுள்ளார். அவரது வளர்ச்சி அரசுக்கு பிடிக்கவில்லை. ஊடகங்கள் அவரை தவறாக சித்தரிக்கின்றன என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.