பீகார் மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு எலிகளே காரணம் என, அம்மாநில அமைச்சர் ஒருவர் கூறியிருப்பது கடும் விமர்சனத்திற்கும், கேலிக்கும் உள்ளாகியது.
பீகார் மாநிலத்தில் சமீபத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் இதுவரை சுமார் 500 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், வெள்ளப்பெருக்குக்கு உரிய காரணத்தை கண்டறிந்து, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில், அம்மாநில நீர் வளத்துறை அமைச்சர் லலான் சிங், எலிகள் தான் பீகாரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு காரணம் என கருத்து தெரிவித்தார்.
ஆற்றின் கரைகளை எலிகள் சேதப்படுத்தியதாலேயே ஆற்றிலிருந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடியதாக அமைச்சர் லலான் சிங் தெரிவித்தார். “கமலா பாலன் ஆற்றின் கரைகளை எலிகள் சேதப்படுத்தியதாலேயே, ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆற்றின் கரைகளுக்கு அருகே கிராமத்தினர் சேகரித்து வைத்திருக்கும் நெல் மூட்டைகளால் எலிகள் ஈர்க்கப்படுகின்றன. அதனால், ஆற்றின் கரைகளுக்கு எலிகள் வந்து அதனை பலவீனப்படுத்துகின்றன.”, என அமைச்சர் லலான் சிங் கூறினார்.
எலிகள் தான் வெள்ளப்பெருக்குக்கு காரணம் என அமைச்சர் கூறியிருப்பதை எதிர் கட்சிகள் விமர்சித்து வருகின்றன. ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் செய்தி தொடர்பாளர் சக்தி சிங், அமைச்சர் இவ்வாறான கருத்துகளை தெரிவிப்பதன் மூலம் அரசாங்கம் தனது தவறுகளை மறைக்கிரது என விமர்சித்தார். “இதற்கு முன்னர் எலிகள் மதுபானங்களை குடிப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர். இப்போது வெள்ளம் ஏற்பட எலிகளே காரணம் என அமைச்சர் கூறுகிறார். இதற்கு எந்தவித அடிப்படையும் இல்லை”, என தெரிவித்தார்.
இதற்கு முன்னர், பறிமுதல் செய்யப்படும் மதுபானங்களை எலிகளே குடிப்பதாக அம்மாநில காவல் துறை கருத்து தெரிவித்தது. சுமார் 9 லட்சம் லிட்டர் மதுபானங்களை எலிகள் குடித்ததாக காவல் துறை தெரிவித்திருந்தது.