பயணங்கள் தான் மனித வாழ்வை முழுமையாக்கும். பயணங்களின்போது நாம் சந்திக்கும் சில மனிதர்கள், அனுபவங்கள் நம் வாழ்நாளில் மறக்க முடியாதவையாக இருக்கும். அப்படி, 30 நாட்களில் இந்தியாவின் 29 மாநிலங்களை சுற்றிவந்த சுப் முகர்ஜி என்பவர், தன் அனுபவங்களை ஆவணப்பட தொடர்களாக தந்திருக்கிறார்.
பயணங்கள் சம்பந்தப்பட்ட ஆவணப்பட தொடரை உருவாக்க வேண்டும் என்று நினைத்த சுப் முகர்ஜி, 30 நாட்களில் இந்தியாவின் 29 மாநிலங்களை, சுமார் 37,000 மைல்களை சுற்றி வந்து அவற்றின் சிறப்பம்சங்களையும், தான் கண்ட மனிதர்களையும், அனுபவங்களையும் #TravelWithMe என்ற பெயரில் ஆவணப்பட தொடராக தயாரித்து வருகிறார்.
இந்தியா போன்று மிகப்பெரிய நாடு முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது என்பது அவ்வளவு எளிதல்ல. அதற்கு முன்கூட்டியே பல தயாரிப்புகள், மெனக்கெடல்களை செய்ய வேண்டும். இதற்காக, 4 மாதங்கள் திட்டமிட்டிருக்கிறார் சுப் முகர்ஜி. கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி ஆரம்பித்த இவரது பயணம், நவம்பர் 1, 2016-ஆம் ஆண்டு நிறைவடைந்தது.
இந்தியா குறித்து பலருக்கும் தெரியாத சிறப்பம்சங்களை இந்த பயணம் மூலம் கண்டுணர்ந்திருக்கிறார் சுப் முகர்ஜி. மூன்று கடல்களும் இணையும் இடம், ஆசியாவின் தூய்மையான பகுதி, கல்லறைக்கு நடுவே செயல்பட்டு வரும் உணவகம், 250 வயதான புளியமரம் இன்னும் பல விசித்திரமான, வித்தியாசமான இடங்கள் இந்தியாவில் தான் உள்ளன என்பது இவருடைய பயண ஆவணப்படத்தின் மூலம் நமக்கு தெரியவரும்.
பயணத்தின்போது தன் வாழ்வையே புரட்டிப்போடும் அளவுக்கு பல அனுபவங்களை பெற்றிருக்கிறார் சுப் முகர்ஜி. நடுரோட்டில் ஒருவர் மீது வாகனத்தை மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற நபர், தங்களது கிராமத்தில் பள்ளிக்கூடம் கட்ட உதவிகேட்கும் மக்கள், தன் உழைப்புக்கு சரிவர கூலி கிடைக்காமல் வேதனையின் உச்சத்தில் இருக்கும் விவசாயிகள், காஷ்மீரில் நிகழும் கலவரங்களுக்கு இரையான அழகிய குடும்பங்கள் என எல்லாவற்றையும் தன் ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார் சுப் முகர்ஜி.
இவை எல்லாவற்றையும் தொடராக வெளியிட கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் சுப் முகர்ஜி மற்றும் குழுவினர், பிறரிடமிருந்து நிதியுதவியை எதிர்பார்க்கின்றனர்.
இந்த பயண அனுபவம் குறித்து ScoopWhoop இணையத்தளத்துக்கு பேட்டியளித்த சுப் முகர்ஜி, “பயண ஆவணப்படம் எடுக்க முடிவெடுத்தபோது அது என்னவாக இருக்கும் என துளி கூட எண்ணம் இல்லை. பயணத்தின்போது நான் சந்தித்த மனிதர்கள் பலர், தான் பேச விரும்பாத பல விஷயங்களை என்னிடம் பேசினர். இந்தியாவை பற்றி கேள்விப்படாத விஷயங்களை காட்சிப்படுத்தியிருக்கும் இந்த ஆவணப்படத்தை மக்கள் பார்க்க வேண்டும் என நான் விரும்புகிறேன்”, என கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.