மின்சாரம்தான் இவருக்கு உணவு: விநோத சக்தியுடன் வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் மனிதர்

உணவு உண்டால் நமக்கு எவ்வளவு ஆற்றல் கிடைக்குமோ, அதே அளவு ஆற்றல் மின்சாரம் மூலம் அவர் பெறுகிறார். இவர் மின் ஒயரை தொட்டாலே மின்சாதனங்கள் அனைத்தும்...

நமக்கெல்லாம் பசித்தால் உணவுதானே உண்போம். அதற்கு பதிலாக மின்சாரத்தை உண்டால்? ஆச்சரியப்படாதீர்கள். உண்மையிலேயே உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தனக்கு பசித்தால் உயர்மின்னழுத்த ஒயரை தன் வாயில் வைத்துக்கொள்வார். அப்போது, உணவு உண்டால் நமக்கு எவ்வளவு ஆற்றல் கிடைக்குமோ, அதே அளவு ஆற்றல் மின்சாரம் மூலம் அவர் பெறுகிறார். அதுமட்டுமல்லாமல், இவர் மின் ஒயரை தொட்டாலே அவரது வீட்டில் உள்ள அனைத்து மின்சாதன பொருட்களும் இயங்கிவிடும்.

உத்தரபிரதேசம் மாநிலம் முசாஃபர்நகரை சேர்ந்த நரேஷ் குமார் (வயது 42) என்பவர்தான் அவர். உயர் மின்னழுத்தத்தை தாங்கும் விநோத சக்தி (நல்ல சக்தியோ? தீய சக்தியோ?) இவருக்கு கிடைத்துள்ளது. இவர் அரசு மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிகிறார்.

சுமார் ஆறு வருடங்களுக்கு முன்புதான் தனக்கு இந்த விநோத சக்தி இருப்பது நரேஷ் குமாருக்கு தெரியவந்தது. ஒருமுறை மின்னழுத்தம் சென்று கொண்டிருக்கும் ஒயரை தவறுதலாக தொட்டுவிட்டார். ஆனால், ஆச்சரியம். அவரை மின்சாரம் தாக்கவில்லை.

அப்போதுதான் நரேஷ் குமாருக்கு இந்த வினோத சக்தி இருப்பது புரிந்தது. அன்றிலிருந்து தொடர்ச்சியாக மின் சாதனங்களை தொட்டு தொட்டு அதனை இயங்க வைப்பார்.

அதுமட்டுமல்லாமல், மின்சார ஒயரை, தொடுவது மூலமோ, அதனை வாயில் வைத்து கடிப்பதன் மூலமோ இவருக்கு ஆற்றல் கிடைக்கிறது.

எப்போதெல்லாம் அவருக்கு பசிக்கிறதோ அப்போதெல்லாம் மின்சாரம் தான் அவருக்கு உணவு. மின்சாரம் மூலம் தனக்கு ஏகப்பட்ட ஆற்றல் கிடைப்பதாக அவர் உணர்கிறார்.

“வீட்டில் உண்பதற்கு ஏதுமில்லாத போது எனக்கு பசித்தால், நான் மின் ஒயரை பிடித்துக் கொள்வேன். அரை மணிநேரத்தில் எனக்கு ஆற்றல் கிடைத்துவிடும். எனக்கு மின்சாரம் உணவு போன்றது.”, என கூறுகிறார் நரேஷ்.

அவரது வீட்டில் எங்கும் ஸ்விட்ச் போர்டுகள் இல்லை. இவரே மின்னழுத்த ஒயரை பிடித்து அனைத்து மின்சாதனங்களையும் இயங்க வைக்கிறார்.

என்னதான் யாருக்கும் இல்லாத சக்தி நரேஷ் குமாருக்கு இருந்தாலும், அவரது குடும்பத்தினருக்கு வருத்தமே மேலோங்கியிருக்கிறது. குறிப்பாக அவரது மனைவி சர்மிஷ்தாவிற்கு வருத்தம் அதிகம். தன் கணவர் இந்த சக்தியை உணர்வதற்கு முன் 12 சப்பாத்திகளை சாப்பிடுவார் எனவும், அதற்கு பிறகு இப்போது மின்சாரமே உணவாக மாறிப்போனது குறித்தும் அவர் மனைவி கவலை தெரிவிக்கிறார்.

“எங்கள் வீட்டில் எந்த ஸ்விட்ச் போர்டுகளும் இல்லை. சில சமயங்களில், நானும் எங்கள் குழந்தைகளும் எங்களை மின்சாரம் தாக்கிவிடுமோ என்ற அச்சம் எழும்.”, என கூறுகிறார் சர்மிஷ்தா.

ஆனால், தன்னுடைய இந்த விநோத சக்தியை நரேஷ் குமார் சிறப்பாக உணர்கிறார். “நான் எல்லோரிலிருந்தும் தனித்துவமாக உணர்கிறேன். இதை எல்லோராலும் செய்ய முடியாது. என்னுடைய மனைவி இதனால் வருத்தமாக இருக்கலாம். ஆனால், மற்றவர்கள் இதனை அற்புதமாக உணர்வார்கள்”, என தனக்கு கிடைத்த விநோத சக்தியுடன் வாழ பழகிக்கொண்ட நரேஷ் குமார் கூறினார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close