5, 6 இலக்கங்களில் சம்பளத்தை எந்த நிறுவனம் கொட்டிக் கொடுத்தாலும், நமக்கு அதைத்தாண்டி இந்த சமூகத்திற்கு செய்ய வேண்டிய பொறுப்பு இருக்கிறது என்பதை உணர்ந்தால், அந்த வேலையில் அடுத்த கணத்திலிருந்து நீடிக்க முடியாது. அப்படித்தான், இந்தியாவின் உயர் கல்வி நிறுவனமான ஐ.ஐ.எஸ்.சி.யில் படித்த 33 வயதான ஸ்ரீதர் என்பவருக்கும் ஒருநாள் தோன்றியது.
இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எஸ்.சி.) கருவி மயமாக்கல் துறையில் (Instrumentation) முதுகலை பட்டம் பெற்ற ஸ்ரீதர், கைநிறைய சம்பளத்தில் புனேவில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், இந்த சமூகத்திற்கு அர்த்தமான ஒன்றை இந்த வேலையின் மூலம் செய்ய முடியாது என்பதை ஸ்ரீதர் உணர்ந்தார். இப்போது, ஸ்ரீதர் என்ன செய்துகொண்டிருக்கிறார் தெரியுமா? பன்னாட்டு நிறுவனத்தில் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை உதறித்தள்ளிவிட்டு, பெங்களூருவில் படிப்பதற்கே வசதியில்லாத ஏழை குழந்தைகளுக்கு ரோபோட்டிக்ஸை சுவாரஸ்யமாக கற்றுத் தந்துக் கொண்டிருக்கிறார்.
இதற்காக, சேவ பாரதி என்ற அரசு சாரா நிறுவனத்துடன் இணைந்து பெங்களூருவில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு ரோபோட்டிக்ஸ் பயிற்சி அளிக்கிறார். அதுவும் சுவாரஸ்யத்துடன்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைக்கு ஒருமுறை பேட்டியளித்த ஸ்ரீதர், “படித்து முடித்தவுடன் நான் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது, அங்குள்ள குடிசை பகுதிகள், அரசு பள்ளிகளுக்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு ரோபோட்டிக்ஸ் குறித்து கற்றுத் தருவேன். குழந்தைகளுக்கு ஜாலியாக, செயல்முறை விளக்கத்துடன் அறிவியலை கற்றுக் கொடுக்க வேண்டும் என நான் நினைத்தேன். நான் பார்த்த குழந்தைகள் எல்லோரும் அறிவியலை காதலித்தார்கள். அதனால், வேலையை விட்டுவிட்டு 2014-ஆம் ஆண்டு பெங்களூருவுக்கு வந்தேன்”, என கூறினார்.
உலகம் முழுதும் உள்ள குழந்தைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் Robocup என்ற போட்டியில், ஸ்ரீதர் பயிற்றுவித்த பள்ளி குழந்தைகள் கடந்தாண்டு பங்கு பெற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இது அந்த குழந்தைகளுக்கு ஸ்ரீதர் எவ்வளவு அர்ப்பணிப்புடன் ரோபோட்டிக்ஸ் சொல்லிக் கொடுத்தார் என்பதற்கான சான்று. ஆனால், இம்முறை Robocup நிகழ்வு ஜப்பானில் நடைபெறுகிறது. கூலி தொழிலாளிகளின் பிள்ளைகளாக உள்ள அக்குழந்தைகளை ஜப்பானுக்கு அழைத்து செல்ல போதிய நிதியுதவி இல்லாமல் தவிக்கிறார் ஸ்ரீதர்.
அதனால், ஸ்ரீதர் நிதியை பெருக்குவதற்கு பலரிடம் ஆதரவு திரட்டி வருகிறார். இதுவரை 2.4 லட்ச ரூபாய் நிதி திரட்டியிருக்கும் ஸ்ரீதர், தன் சொந்த பணத்தின் மூலமே மீதி செலவுகளை சந்திக்க முடிவெடுத்திருக்கிறார்.
தான் கற்றுக்கொடுக்கும் குழந்தைகள் குறித்து பேசிய ஸ்ரீதர், “செயல்முறையாக சொல்லிக் கொடுக்கும் எவற்றையும் எளிதில் அவர்கள் கற்றுக்கொள்வார்கள். நான் சொல்லிக் கொடுக்கும் எல்லாவற்றையும் தக்க வைத்து சரியான இடங்களில் அதனை பயன்படுத்த அவர்கள் பழகியிருக்கின்றனர்”, என கூறினார்.
தன் செயலின் மூலம் தான் படித்த படிப்புக்கு அர்த்தத்தை தந்திருக்கிறார் ஸ்ரீதர்.