தெலங்கானா மாநிலத்தில் உள்ள சிறிய கிராமம் ஒன்றில் உள்ள பொதுமக்கள், காவல் துறையினர் என எல்லா தரப்பு மக்களும் காலையில் தினந்தோறும் தேசிய கீதம் பாடலை பாடுகின்றனர். அந்த நேரத்தில் யார் என்னென்ன வேலை செய்துகொண்டிருந்தாலும், அதனை அப்படியே அதே இடத்தில் தேசிய கீதம் பாடுவதை வழக்கமாக கடைபிடித்து வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம் கரிம்நகர் மாவட்டத்தில் உள்ள ஜம்மிகுண்டா கிராமத்தில் தான் இதனை வழக்கமாக கடைபிடித்து வருகின்றனர். தினமும் காலை 7:54 மணிக்கு அனைவரும் அந்தந்த இடத்திலேயே நின்று தேசிய கீதம் பாடுகின்றனர். காவல் நிலையத்துடன் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு காலையில் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. பேருந்துகள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் நின்று பாடுகின்றனர்.
இந்த வழக்கத்தை கடந்த ஒரு வாரமாக கடைபிடித்து வருகின்றனர். இதனை ஜம்மிகுண்டா நகர காவல் நிலைய ஆய்வாளர் பிரசாந்த் ரெட்டி என்பவர் துவங்கி வைத்தார். “இது தேசப்பற்று மட்டுமல்ல. நம்முடைய தேசிய கீதத்தை தெரிந்து கொள்வதற்கும் உதவிகிறது. நான் மக்களிடம் பேசும்போது பலருக்கு தேசிய கீதம் முழுமையாக தெரிவதில்லை. இதனை இந்நாட்டுக்கு நான் ஆற்றும் கடமையாக கருதுகிறேன்.”, என பிரசாந்த் ரெட்டி தெரிவிக்கிறார்.
தேசிய கீதத்தை தினமும் பாடுவதன் மூலம் குற்றச்சம்பவங்கள் குறைய வாய்ப்பிருப்பதாகவும் அவர் கருதுகிறார். “ஒருவர் காலையில் ஏதாவது குற்றம் செய்ய வேண்டும் என்ற மனநிலையில் செல்லும்போது, நடுவழியில் அவர் தேசிய கீதம் பாடினால் அவர் தன் மனநிலையை மாற்றிக்கொள்ள வாய்ப்புண்டு.”, என பிரசாந்த் ரெட்டி தெரிவித்தார்.
“நமது தேசிய கீதம் இந்தியாவின் காலை பாடல். சினிமா தியேட்டர்களில் பாடுவதைவிட காலையில் மக்களுடன் இணைந்து அதனை பாடும்போது அது வாழ்க்கை முழுமைக்கும் நிலைத்திருக்கும். அப்படி பாடும்போது நன்றாக உணர்வதாக மக்கள் என்னிடம் கூறுகின்றனர்”, என பிரசாந்த் ரெட்டி கூறுகிறார்.
“பொதுமக்கள் அவர்களாகவே விரும்பி நின்று தேசிய கீதம் பாடுகின்றனர். பேருந்து ஓட்டுநர்கள் அதிலிருந்து இறங்கி பயணிகளுடன் இணைந்து பாடுகின்றனர். சிலர் சல்யூட் அடிக்கின்றனர். இதில், காவல் துறையினர் மக்களை கட்டாயப்படுத்தவில்லை.”, என கரிம்நகர் காவல் ஆணையர் கமலாசன் ரெட்டி கூறினார்.