கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்தித்து, செப். 21-ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் மாநில சுயாட்சி மாநாட்டுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் செப்டம்பர் 21-ம் தேதி சென்னையில் மாநில சுயாட்சி மாநாடு நடைபெற இருக்கிறது. மாநில கல்வி உரிமையை பறிக்கும் ‘நீட்’, மாநில வரி வருவாயை பறிக்கும் ஜி.எஸ்.டி. என மாநில உரிமைகளை குறிவைத்து மோடி அரசு பறிப்பதாக குற்றம்சாட்டி இந்த மாநாட்டை விடுதலை சிறுத்தைகள் ஒருங்கிணைக்கிறார்கள்.
பாஜக.வுக்கு எதிரான கட்சிகளின் தலைவர்களை இந்த மாநாட்டு மேடையில் அணி திரட்டுகிறார்கள். இதற்காக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சில நாட்களுக்கு முன்பு திருமாவளவன் சந்தித்து அழைப்பு விடுத்தார். இடதுசாரி தலைவர்கள், சிறுபான்மை அமைப்புகள் ஆகியவற்றையும் அழைக்க இருக்கிறார். தவிர, பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி இதில் பங்கேற்க ஒப்புதல் கொடுத்திருக்கிறார்.
அடுத்தகட்டமாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரையும் அழைக்க திருமா திட்டமிட்டார். அதன்படி ஆகஸ்ட் 31 (இன்று) பெங்களூரு சென்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவை திருமா சந்தித்தார். அப்போது சித்தராமையாவுக்கு மலர் செண்டு வழங்கி, பொன்னாடை அணிவித்தார்.
சென்னையில் நடத்தவிருக்கும் மாநில சுயாட்சி மாநாட்டின் நோக்கம் குறித்து சித்தராமையாவிடம் தெரிவித்ததுடன், அதில் பங்கேற்க அழைப்பும் விடுத்தார். சித்தராமையா நேரடியாக வர இயலாவிட்டால், அவரது பிரதிநிதியை அனுப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க செல்கிறார் திருமாவளவன்.
தமிழகத்தில் பாஜக எதிர்ப்பணியை வலுப்படுத்தும் ஒரு உத்தியாக இந்த மாநாட்டை திருமாவளவன் ஒருங்கிணைப்பது குறிப்பிடத்தக்கது.