கொல்கத்தாவில் கழிவுநீர்த் தொட்டி அமைக்கும் பணிகளின் போது, அதற்குள் இறங்கிய மூன்று தொழிலாளர்கள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
நபாத்வீப் நகராட்சியில் உள்ள உட்பர்ன் சாலையில் வெள்ளிக்கிழமை கழிவுநீர் தொட்டி அமைக்கும் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, கழிவுநீர் தொட்டியின் உள்ளே கான்க்ரீட் அமைப்பை தாங்கிப் பிடிக்க வைக்கப்பட்டிருந்த மரக்கட்டையை அகற்றுவதற்காக கழிவுநீர் தொட்டியில் இறங்கினார். ஆனால், வெகுநேரமாகியும் அவர் வெளியே வராததால் மற்றொரு தொழிலாளியும் உள்ளே இறங்கினார். அவரும் வெகுநேரமாகியும் வெளியே வராத நிலையில், மூன்றாவதாக மற்றொரு தொழிலாளரும் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினார்.
ஆனால், கழிவுநீர் தொட்டியின் உள்ளே இறங்கிய மூன்று தொழிலாளர்களும் வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறையினர், கழிவுநீர் தொட்டியில் மூர்ச்சையற்று கிடந்த மூன்று தொழிலாளர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மூவரும் இறந்துவிட்டதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, மூவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கழிவுநீர் தொட்டியில் கான்க்ரீட் இடிந்து விழுந்து அதனால் மூச்சுத்திணறி தொழிலாளர்கள் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இறந்தவர்கள் ஹரி கிருஷ்ண தேப்நாத், சந்து ஹல்டார் என்பது தெரியவந்தது. மற்றொரு நபரின் பெயர் வெளியாகவில்லை. இறந்தவர்களின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்ற சம்பவம் அம்மாவட்டத்தில் ஜூலை மாதத்தில் இரண்டாவது முறையாக நடைபெறுகிறது. கடந்த 2-ஆம் தேதி கழிவுநீர் தொட்டி கட்டுமான பணிகளின்போது அதற்குள் இறங்கிய மூன்று தொழிலாளர்கள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.