கர்நாடக மாநிலத்தில் மன்னர் திப்பு சுல்தான் ஜெயந்திக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், “திப்பு சுல்தான் பிரிட்டிசாரை எதிர்த்து போரிட்டு வீர மரணம் அடைந்தவர்”, என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறிய கருத்து, அக்கட்சிக்குள்ளேயே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் மன்னர் திப்பு சுல்தான் ஜெயந்தி வரும் நவம்பர் 10-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஆனால், திப்பு சுல்தான் இந்துக்களுக்கும் கர்நாடக மக்களுக்கும் எதிரானவர் எனக்கூறின், அவருக்கு ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டால் பெரும் போராட்டங்களை முன்னெடுப்போம் என, அம்மாநில பாஜக தொடர்ந்து எச்சரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல்,திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவுக்கான அழைப்பிதழில், தன்னுடைய பெயரை சேர்க்க வேண்டாம் என, மத்திய திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டே மாநில அரசுக்கு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் சட்டசபை கட்டடத்தின் வைர விழா கொண்டாட்டமான ‘விதான சவுதா’ புதன் கிழமை நடைபெற்றது. இதில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டார். அப்போது, கர்நாடகாவின் சிறந்த மன்னர்கள் குறித்தும், ராணிகள் குறித்தும் அவர் பேசினர். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,
“திப்பு சுல்தான் பிரிட்டிசாரை எதிர்த்து வீர மரணம் அடைந்தவர். போரில் ராக்கெட்டுகள் உள்ளிட்ட நவீன சாதனங்களை பயன்படுத்துவதில் அவர் முன்னோடி. அதன்பிறகு, அந்த தொழில்நுட்பத்தை ஐரோப்பியர்கள் பயன்படுத்தினர்.”, என கூறினார்.
மேலும், அவர் பேசுகையில், ”கர்நாடக வல்லமைமிக்க வீரர்களை கொண்டது. கிருஷ்ணதேவராயர் விஜயநகர பேரரசின் தலைமை சிறந்த மன்னராக விளங்கினார். அவர் இந்தியர்கள் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார். கெம்பே கௌடா பெங்களூருவை கட்டமைத்தவர். கிட்டூரின் ராணி சென்னம்மா, ராணி அப்பக்கா ஆகியோர் காலணியாதிக்கத்தை எதிர்த்து போரிட்டவர்கள்” என தெரிவித்தார். மேலும், “இந்திய ராணுவத்தில் சிறந்து விளங்கிய கே.எம்.கரியப்பா மற்றும் கே.எஸ்.திம்மையா ஆகியோர் கர்நாடகாவின் மகன்கள்”, என ராம்நாத் புகழாரம் சூட்டினார்.