திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-யான சுல்தான் அஹ்மத் மாரடைப்பால் இன்று காலமானார். 64 வயதான சுல்தான் அஹ்மத், மேற்கு வங்க மாநிலம் உலுபெரியா மக்களவை தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது அவர் மத்திய சுற்றுலா துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார்.
இன்று காலை 11.15-11.30 மணிக்கு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக அவரை கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சுல்தான் அகமத் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முன்பாக, காங்கிரஸ் கட்சியில் இருந்து இரண்டு முறை ( 1987–91 மற்றும் 1996–2001) சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சுல்தான் அஹ்மத் மறைவையொட்டி திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். சுல்தான அஹ்மத்தின் மறைவு அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.