வருமான வரித் தாக்கல் செய்வதற்காக அளிக்கப்பட கூடுதல் அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. எனவே, வருமான வரித் தாக்கல் செய்யும் நபர்கள் இன்று நள்ளிரவுக்குள் தங்களது கணக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வருமான வரி செலுத்துபவர்கள், 2017-18 நிதியாண்டுக்கான வருமான வரிக்கணக்கை ஜூலை 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி ஏராளமானோர் தங்கள் வருமான வரி கணக்குகளை வருமான வரித்துறை அலுவலகங்களில் நேரிலும், நேரில் தாக்கல் செய்ய இயலாதவர்கள் இணையதளம் வாயிலாகவும் தாக்கல் செய்து வந்தனர்.
அதேபோல், வருமான வரித்துறை அலுவலகங்களில் கணக்கு தாக்கல் செய்ய சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஏராளமானோர் நேரில் வந்து தங்களது கணக்குகளை தாக்கல் செய்து வந்தனர்.
ஆனால், வரித் தாக்கல் செய்ய கடைசி நாளான ஜூலை 31-ம் தேதி ஒரே நேரத்தில் ஏராளமானோர் ஆன்லைனில் வரிக் கணக்கு தாக்கல் செய்ய முயன்றதால் சர்வர் முடங்கியது. இதனால் வருமான வரித் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 5-ம் தேதி (இன்று) வரை கால அவகாசம் வழங்குவதாக வருமான வரித் துறை அறிவித்திருந்தது.
அதன்படி, வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் இன்றுடன் முடிவடைகிறது. எனவே, இதற்காக வருமான வரிப் படிவம் தாக்கல் சமர்ப்பிக்க நாடு முழுவதும் நள்ளிரவு வரை வருமான வரி அலுவலகங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் வருமான வரி சேவை மையங்கள் அல்லது இணையதளம் வாயிலாக தங்கள் கணக்குகளை இன்று நள்ளிரவுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.