குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதில் பதிவான வாக்குகள் வருகிற 20-ம் தேதியன்று எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதர்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
பாஜக சார்பில் பிகார் மாநில முன்னாள் ஆளுநரும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களும் அனைத்து மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களும் இதில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். எம்எல்ஏ-க்கள் சட்டப்பேரவையிலும், எம்.பி.-க்கள் நாடாளுமன்றத்திலும் வாக்களிப்பார்கள். தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதி பெற்றவர்கள் மற்ற மாநிலங்களில் வாக்களிக்கலாம். அதன்படி, பாஜக எம்.பி., பொன்.ராதாகிருஷ்ணனும், கேரள மாநில எம்எல்ஏ ஒருவரும் தமிழக சட்டபேரவையில் வாக்களிக்கவுள்ளனர்.
இந்தத் தேர்தலில் மக்களவை உறுப்பினர்கள் 543 பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 233 பேர் என மொத்தம் 776 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர். இது தவிர அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் 4,120 பேரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். மொத்த வாக்காளர் எண்ணிக்கை 4,896. மக்களவையின் 2 நியமன உறுப்பினர்கள், மாநிலங்களவை யின் 12 நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது. மாநிலங்களில் உள்ள மேலவை உறுப்பினர்களும் இந்தத் தேர்தலில் வாக்களிக்க மாட்டார்கள். ஒரு எம்.பி.-யின் ஓட்டு மதிப்பு 708 ஆகும். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டின் மதிப்பு, அந்தந்த மாநில மக்கள் தொகைக்கு ஏற்ப மாறுபடும். அதன்படி மொத்த வாக்குகளின் மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 903 ஆகும்.
நாடாளுமன்ற வளாகம் மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக, நாடாளுமன்றத்தில் ஒரு வாக்குச்சாவடி, அனைத்து மாநில சட்டப் பேரவைகளிலும் தலா ஒரு வாக்குச் சாவடி என மொத்தம் 32 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை, சட்டப்பேரவை வளாகத்தில் குழுக்கள் கூடும் அறையில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக வாக்குப்பெட்டி, வாக்குச்சீட்டுகள் ஆகியன தயார் நிலையில் உள்ளன. வாக்குப்பதிவு முறை குறித்து ஏற்கனவே எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. எம்.பி.க்கள் பச்சை நிறத்திலும், எம்எம்ஏக்கள் இளஞ்சிவப்பு நிறத் திலும் உள்ள வாக்குச் சீட்டுகளில் வாக்கு அளிக்க வேண்டும். அதிகாரிகள் வழங்கும் பேனா மூலமாக மட்டுமே வாக்களிக்க வேண்டும்.
வாக்குப்பதிவு முடிந்த பிறகு, மாநில தலைநகரங்களில் இருந்து வாக்குப் பெட்டிகள் அனைத்தும் உடனடியாக சீல் வைக்கப்பட்டு டெல்லிக்கு கொண்டு செல்லப்படும். அதன்பின்னர், வருகிற 20-ம் தேதியன்று வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.