ஜிஎஸ்டி அமலானதையடுத்து, நாடு முழுவதும் 22 மாநில எல்லைகளில் இருந்த சுங்கச் சாவடிகள் அகற்றப்பட்டுள்ளன.
நான்கு வழிச்சாலைகளில் குறிப்பிட்ட கிலோ மீட்டருக்கு ஒன்று என்ற கணக்கில் சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் சிலவற்றை தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் நேரடியாகவும் பல சுங்கச்சாவடிகளில் தனியாரும் வசூல் செய்கிறார்கள்.
ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்துக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த சுங்கச் சாவடிகளின் வசூலை கடந்து செல்ல முடியாது. அதேபோல் தான் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கும். மாநில எல்லைகளில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த சோதனைச் சாவடிகளை கடந்து செல்வது எளிதான காரியமல்ல. அங்கு வரிசை கட்டிக் கொண்டு நிற்கும் வண்டிகள், போக்குவரத்து நெரிசல் என அதனை கடந்து செல்வதற்குள் போதும் போதுமென்றாகி விடும்.
இத்தகைய சூழலில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்தச் சட்டம் ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நாடு முழுவதும் 22 மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டுள்ளன. இந்த மாநிலங்கள் தவிர, இன்னும் எட்டு மாநில அரசுகளும் சோதனைச் சாவடிகளை நீக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்ல சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. மாநிலங்களுக்கு இடையில் பொருட்கள் பரிமாற்றம் நடைபெறும்போது மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் சோதனை நடைபெறுவது வழக்கம். இதனால் பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டது. சரக்கு வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதால், வாகன நெரிசலும் ஏற்பட்டது.
தற்போது இரு மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டதன் மூலம் வாகனங்கள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு போக்குவரத்து நெரிசல் இன்றி எளிதில் நுழையும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல், சரக்கு வாகனங்கள் வரிசை கட்டி நிற்கும் முறையும் முடிவுக்கு வந்துள்ளது.
இந்தியாவில் சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 85,000 கி.மீ தூரம் பயணிக்கிறது. ஆனால், மற்ற நாடுகளின் வாகனங்கள் சுமார் 150,000 முதல் 200,000 வரை பயணப்படுகிறது. மேலும், 16 சதவீத நேரத்தை சுங்கச் சாவடிகளில் இத்தகைய வண்டிகள் செலவிட நேரிடுகிறது என ஆய்வு ஒன்று கூறுகிறது. சுங்கச்சாவடிகள் தற்போது அகற்றப்பட்டுள்ளதன் மூலம் சரக்கு போக்குவரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.