தெலுங்கு திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள போதைப் பொருள் வழக்கு தொடர்பாக, பிரபல திரைப்பட நடிகை காஜல் அகர்வாலின் மேலாளர் ரோன்னி கைது செய்யப்பட்டார்.
தெலுங்கு திரைப்பட உலகில் போதைப்பொருட்கள் பழக்கம் கணிசமாக இருப்பதாக புகார் வந்ததையடுத்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த போதைப் பொருள் கடத்தல்காரரை அண்மையில் கைது செய்தனர். மேலும், கெல்வின் ஐதராபாத்திற்கு போதைப்பொருட்கள் கடத்திவந்து பியூஸ் என்பவர் மூலம் நடிகர், நடிகைகளுக்கு விற்பனை செய்ததாக கெல்வின் காவல் துறையினரிடம் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, பீயூஸ் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, இதனை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்த பரபரப்பான போதைப்பொருள் புகார் சம்பவத்தில், பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத், ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே.நாயுடு, நடிகர்கள் தருண், நவ்தீப், சுப்பராஜூ, ரவி தேஜா, அனந்த கிருஷ்ண நந்து, நடிகைகள் சார்மி, முமைத் கான், கலை இயக்குநர் சின்னா உள்ளிட்ட பலரும்போதைப்பொருட்களை பயன்படுத்தியதில் தொடர்பிருப்பதாக தெரியவந்தது. இதில், பூரி ஜெகன்நாத், ஷ்யாம் கே.நாயுடு, தருண், நவ்தீப், சுப்பராஜூ ஆகியோரிடம் சிறப்பு புலனாய்வு குழு தீவிர விசாரணை நடத்தியது. மற்றவர்களிடம் இந்த வாரத்தில் விசாரணை நடத்த உள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நடிகை காஜல் அகர்வாலின் மேலாளர் ரோன்னி என்பவர் ஐதராபாத்தில் கலால் துறையின் சிறப்பு புலனாய்வு குழுவினரால் திங்கள் கிழமை கைது செய்யப்பட்டார். மேலும், இவரது வீட்டிலிருந்து ‘மரிஜூவானா’ எனப்படும் போதைப்பொருளும் அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டது. இவருக்கும் ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கடத்தல்காரர்களிடம் தொடர்பு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
நடிகர் நவ்தீப்பிடம் திங்கள் கிழமை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தினர். அன்றைய நாளே ரோன்னி கைது செய்யப்பட்டிருப்பதால், நவ்தீப் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ள நடிகர் நடிகைகளின் முடி, ரத்தம், நகம் உள்ளிட்டவற்றையும் சிறப்பு புலனாய்வு குழுவினர் தடயவியல் ஆய்விற்காக சேகரித்து வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.