பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக, இந்திய கடற்படையின் முன்னாள் வீரர் குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை வீரரான குல்பூஷன் ஜாதவிற்கு பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டணை விதித்து தீர்ப்பளித்தது. குல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தானில் உளவு வேலை செய்ததாகவும், தீவிரவாதத்தில் ஈடுபாடு கொண்டவர் எனவும் பாகிஸ்தான் கருதியது. ஆனால், குல்பூஷன் பாகிஸ்தானுக்கு கடத்தப்பட்டார் என்றும், அவர் ஒன்றும் அறியாதவர் என்றும் இந்தியா தெரிவித்தது.
மேலும், குல்பூஷன் ஜாதவிற்கு மரண தண்டணை விதிக்கப்பட்டதற்கு இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, இந்திய அரசு சர்வதேச நீதிமன்றத்தை நாடி, குல்புஷன் ஜாதவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக, நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இரு நாடுகளும் தங்களது வாதங்களை 3 நாட்களாக முன் வைத்தன.
இந்நிலையில், நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. 11 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. குல்புஷன் ஜாதவிற்கு மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கை நியாயமானது என்று சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இறுதி தீர்ப்பு வரும் வரையில் குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.