’தி ஆர்க்யூமெண்டேடிவ் இந்தியன்’, சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியானது டிரெய்லர்

அந்த டிரெய்லரில், திரைப்பட தணிக்கைக்குழு நீக்க வேண்டும் என்று குறிப்பிட்ட ‘பசு, குஜராத், இந்து இந்தியா, இந்துத்துவ இந்தியா’, வார்த்தைகள் நீக்கப்பட்டிருந்தன.

பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் குறித்த ஆவணப்படம் ‘தி ஆர்க்யுமெண்டேட்டிவ் இந்தியன்’ என்ற ஆவணப்படத்திலிருந்து ‘குஜராத்’, ’பசு மாடு’, ‘இந்து இந்தியா’, ’இந்துத்துவ இந்தியா’ போன்ற வார்த்தைகளை நீக்கினால் தான் படத்திற்கு சான்றிதழ் அளிப்போம் என திரைப்பட தணிக்கைக் குழு கூறியுள்ள நிலையில், அப்படத்தின் இயக்குநர் சுமன் கோஷ் படத்தின் ட்ரெய்லரை தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார்.

பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் குறித்த ’தி ஆர்க்யுமெண்டேடிவ் இந்தியன்’ எனும் ஆவணப்படத்தை சுமன் கோஷ் என்பவர் இயக்கியுள்ளார். இந்த ஆவணப்படத்தில் அமர்த்தியா சென்னும் தோன்றுகிறார். ஒரு மணிநேரம் ஓடும் இந்த ஆவணப்படமானது 2002 மற்றும் 2017-ஆம் ஆண்டுகள் என இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆவணப்படத்தைக் கடந்த வெள்ளிக் கிழமை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. இந்நிலையில், செவ்வாய் கிழமை கொல்கத்தாவில் உள்ள திரைப்பட தணிக்கைக் குழு மண்டல அலுவலகத்தில் தணிக்கை அதிகாரிகளுக்கு இப்படம் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. அப்போது, படத்தை பார்த்த அதிகாரிகள், படத்திலிருந்து ‘குஜராத்’, ’பசு மாடு’, ‘இந்து இந்தியா’, ’இந்துத்துவ இந்தியா’ உள்ளிட்ட வார்த்தைகளை நீக்கினால் மட்டுமே யு/ஏ சான்றிதழ் அளிக்க முடியும் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

”’குஜராத்’, ‘பசு மாடு’ உள்ளிட்ட வார்த்தைகளை நீக்க வேண்டும் என தணிக்கைக் குழு கூறியிருப்பது கேலியாக உள்ளது. இந்த படத்திலிருந்து ஒரு வார்த்தையைக் கூட நாங்கள் நீக்க போவதில்லை. ஆனால், இதற்கென சில நடைமுறைகள் உள்ளன. நாங்கள் அந்த நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த விவகாரம் எவ்வளவு தூரம் செல்கிறது என்பதை பார்ப்போம்.”, என ஆவணப்படத்தின் இயக்குநர் சுமன் கோஷ் தெரிவித்திருந்தார்.

இதனிடையே ”இந்து இந்தியா உள்ளிட்ட வார்த்தைகள் இனவாத வெறுப்பை உருவாக்கலாம். மேலும், இந்த வார்த்தைகளால் குஜராத் மாநிலத்திற்கு ஆபத்து நேரலாம்”, என தணிக்கைக் குழுவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பேசிய அமர்த்தியா சென், “இந்த விஷயம் எனக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இந்தியா எதேச்சதிகாரத்தின் பிடியில் இருப்பதை இது உணர்த்துகிறது. அவர்களுக்கு நான் பசு மாட்டை பற்றி பேசியது பெரிதல்ல. அவர்கள் மாட்டு இறைச்சிக்காக தடை செய்தது குறித்து பேசியதுதான் பிரச்சனை. அதேபோல், குஜராத் என்ற வார்த்தையை உபயோகித்தது பிரச்சனை அல்ல. குஜராத்தில் 2002-ஆம் ஆண்டில் ஏற்பட்ட கலவரம் குறித்து நான் பேசியது அவர்களுக்கு பிரச்சனையாகிறது.”, என கூறினார்.

இந்த சர்ச்சைகளால், அப்படத்திற்கு திரைப்பட தணிக்கைக் குழு இன்னும் சான்றிதழ் அளிக்கவில்லை. இந்நிலையில், படத்தின் இயக்குநர் சுமன் கோஷ் தன் முகநூல் பக்கத்தில் ஆவணப்படத்தின் ஒரு நிமிடம் 41 நொடிகள் ஓடும் டிரெய்லரை பகிர்ந்தார். அந்த டிரெய்லரில், திரைப்பட தணிக்கைக்குழு நீக்க வேண்டும் என்று குறிப்பிட்ட ‘பசு, குஜராத், இந்து இந்தியா, இந்துத்துவ இந்தியா’, ஆகிய வார்த்தைகள் நீக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், திரைப்படத் தணிக்கைக் குழுவின் தலைவர் பஹ்லஜ் நிஹ்லானி இதற்கு கண்டனம் தெரிவித்தார். “சான்றிதழ் அளிக்கப்படாத ஒரு படத்தின் எந்தவொரு பகுதியையும் இவ்வாறு பதிவிடுவது சட்டவிரோதமானது”, என பஹ்லஜ் நிஹ்லானி தெரிவித்தார்.

இதுகுறித்து விளக்கமளித்த சுமன்கோஷ், “நான் டிரெய்லரை யுடியூபில் பதிவிட்டால் உலகமே அதைக்காணும். உலகத்தில் உள்ள அனைவரும் எதை பார்க்க வேண்டும் என்பதை இந்திய திரைப்பட தணிக்கைக் குழு எவ்வாறு முடிவு செய்யும்?”, என கூறினார்.

×Close
×Close