ஆந்திர மாநிலத்தில், திருநங்கை ஒருவரை ராணுவ வீரர்கள் சிலர் அடித்து துன்புறுத்தியதாகவும், அவரது ஆடையை கிழித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் கடந்த சனிக்கிழமை இச்சம்பவம் நிகழ்ந்தது. 34 வயது மதிக்கத்தக்க திருநங்கை ஒருவர் அங்குள்ள ராணுவ அணிவகுப்பு மைதானத்திற்கு சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கிருந்த சுமார் 10 ராணுவ வீரர்கள் அவரை அங்கிருந்து வெளியேறுமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனை அவர் ஏற்க மறுத்ததால் அந்த ராணுவ வீரர்கள் திருநங்கையை அடித்து துன்புறுத்தியதாகவும், அவரது ஆடையை கிழித்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட திருநங்கை மருத்துவ சிகிச்சைக்குப்பின், கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் தொடர்பாக தொடர்புடைய ராணுவ வீரர்கள் மீது பேகம்பேட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தார்.
திருநங்கை உரிமைகள் ஆர்வலர் ராச்சனா முத்ரபோயினா என்பவர், பாதிக்கப்பட்ட திருநங்கையின் புகைப்படங்களை அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டதன் மூலம் இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த புகைப்படத்தில் திருநங்கை ஒருவர் கை, கால்களில் ரத்தம் வழிந்த நிலையில் காயங்களுடன் உள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/07/19732276_1716474738365887_7059810472369882191_n-300x249.jpg)
இதுகுறித்து திருநங்கை உரிமைகள் ஆர்வலர் ராச்சனா முத்ரபோயினா கூறுகையில், “அந்த திருநங்கை ராணுவ மைதானத்தில் நுழையவே இல்லை. ராணுவ வீரர்கள் தான் அவரை மைதானத்தின் உள்ளே இழுத்து வந்துள்ளனர். பாதிக்கப்பட்ட திருநங்கை ராணுவ வீரர்களால் அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளார். ஆடைகளை கிழித்துள்ளனர். ராணுவ வீரர்கள் மது அருந்தியிருக்கலாம் என தெரிகிறது. திருநங்கை அங்கிருந்த காவல் துறை வாகனத்தில் இருந்த காவலரை உதவிக்கு அழைத்தார். அப்போது, காவலர் ராணுவ வீரர்களை செல்ஃபோனில் வீடியோ பதிவு செய்ய முயன்றார். ஆனால், ராணுவ வீரர்கள் செல்ஃபோனை பிடுங்கி உடைத்து எறிந்துவிட்டனர். இந்த சம்பவத்திற்கு தகுந்த ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. இது திருநங்கைகளுக்கு எதிராக ஐதராபாத்தில் நடந்த தனி சம்பவம் அல்ல.”, என கூறினார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுக்கு ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ராணுவம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “திருநங்கை ராணுவ வீரர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. அப்படி குற்றம்சாட்டப்பட்டது அடிப்படையற்றது, ஆதாரமற்றது.”, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ”கடந்த சனிக்கிழமை எங்களுடைய அணிவகுப்பு மைதானத்திற்கு சில திருநங்கைகள் வந்தனர். இந்த மைதானம் ராணுவ கட்டுப்பாட்டிலும் பாதுகாப்பிலும் இருப்பதால் அவர்களை வெளியேறுமாறு அங்கிருந்த ராணுவ வீரர்கள் கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் அதை கேட்காமல் ராணுவ வீரர்களிடம் கடுமையான முறையிலும், தவறான முறையிலும் நடந்து கொண்டனர். அதுமட்டுமல்லாமல், அவர்கள் ராணுவ வீரர்களை தாக்கவும் முற்பட்டுள்ளனர்”, என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
திருநங்கை ஒருவரை ராணுவ வீரர்கள் அடித்து துன்புறுத்தி, அவரது ஆடையை கிழித்ததாக குற்றச்சாட்டு எழுந்திருப்பது ஆந்திர மக்களிடையே அச்சத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.