இஸ்லாமியர்கள் முத்தலாக் கூறும் வழக்கத்துக்கு எதிரான மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே எஸ் கேஹர் தலைமையிலான அமர்வு, தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
அந்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் போது ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் கூறக்கூடாது என்பதை மதக்குருக்கள் மணமகனிடம் தெரிவிக்க வேண்டும். இது தொடர்பாக இணையதளம், சமூக வலைதளங்கள் மற்றும் பதிப்புகள் மூலமாக மதகுருக்களுக்கு அறிவுறுத்தப்படும். மேலும், நிக்காவின் போது மணமகன் மற்றும் மணமகள் ஆகியோரிடம் திருமண ஒப்பந்தத்தின் (நிக்காநாமா) நிபந்தனைகள் குறித்து தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் செயலாளர் முகமது ஃபாஸ்லுரஹிம் கூறும்போது: முத்தலாக் என்பது ஷரியத் சட்டத்தில் உள்ளது என்பதால், திருமணம் செய்யும் போது அதாவது நிக்காவின் போது மனமகனிடம் ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் கூறக்கூடாது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.